Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 22, 2020

சதா சர்வகாலமும் கைப்பேசியும் கையுமாக இருப்பவர்கள் கவனத்துக்கு..! #HealthAlert


ஒரு காலத்தில் மனிதனுக்கு தனிமையைக் கழிக்கவும் பொழுது போக்கவும் புத்தகங்கள் உதவின. பிறகு அந்த இடத்தை தொலைக்காட்சி பிடித்தது. இன்று அந்த இடத்தை செல்போன் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிவதும், இரவு முடிவதும் செல்போன் திரையில்தான். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறிந்தால் ஆடிப்போய்விடுவீர்கள். தெரிந்துகொள்வோமா?
புற்றுநோய் அபாயம்!
மொபைல்போன்கள் மின்காந்த கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. இந்தக் கதிர்வீச்சுகள் நம் உடல் திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் IARC ( International Agency for Research on Cancer) நிறுவனம், இந்தக் கதிர்வீச்சுகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. குழந்தைகளின் நரம்பு மண்டலம் வளர்ச்சிநிலையில் இருப்பதால், பெரியவர்களைவிடக் குழந்தைகளைத்தான் இது அதிகம் பாதிக்கும். அதோடு, குழந்தைகளுக்கு மூளைப் புற்றுநோய் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு.
ஆனாலும் செல்போனால் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள், `கதிர்வீச்சுகளால் புற்றுநோய் ஏற்பட, இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அலைபேசியைத் தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும்’ என்கிறார்கள். செல்போனுக்கும் பயனருக்கும் உள்ள தூரம், பயனருக்கும் செல்போன் டவருக்கும் உள்ள தூரம், செல்போனின் வகை போன்றவற்றைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடுகின்றன. இயர் போனைப் பயன்படுத்துவதன் மூலம் நமது தலைக்கும் செல்போனுக்கும் இடையேயான தூரத்தைக் குறைக்கலாம். இதனால் பாதிப்புகள் குறையும். குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டைக் கண்காணிப்பதும், முடிந்த அளவுக்கு அதைக் குறைப்பதும் அவசியம்.
கிருமிகளின் வீடு!
நாம் தொடர்ச்சியாக செல்போன் திரையைத் தொடுவதால், நமது கையிலுள்ள கிருமிகள் அதில் சேரும். ஒருகட்டத்தில், ஒரு கழிவறையில் இருப்பதைவிட அதிகக் கிருமிகள் அதில் சேர்ந்திருக்கும். இன்னொருவர் செல்போனைத் தொடும்போது மிக எளிதாக அவர்களையும் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
கண் பிரச்னைகள் உருவாகும்!
செல்போன் திரைகள் கணினித் திரைகளைவிட அளவில் சிறியவை. இவற்றில் உள்ள குறுந்தகவலைப் படிப்பதற்காக கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டியிருக்கும். இப்படி கண்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது, காலப்போக்கில் பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்தும்.
மொபைல் போன்
விபத்துகள்... கவனம்!
ஒரு கையில் வண்டியை பேலன்ஸ் செய்துகொண்டு, மறுகையில் செல்போனைப் பிடித்துப் பேசியபடி போகிறவர்களை நாம் தினமும் பார்க்கிறோம். இதுபோன்ற செய்கையால் விபத்துகள் நிகழ அதிகம் வாய்ப்பு உண்டு. இயர் போன் போட்டுப் பேசினாலும் சில நேரங்களில் பேச்சு சுவாரஸ்யத்தில் கவனம் சிதறிவிடக்கூடும். வண்டி ஓட்டுவதே மறந்துபோய் விபத்துகள் நிகழ்ந்துவிடும் அபாயம் உண்டு. எனவே வாகனங்களை ஓட்டும்போது அலைபேசியில் பேசவே கூடாது. அதேபோல் சாலையைக் கடக்கும்போது, சாலையில் நடந்துபோகும்போது கூட சிலர் அலைபேசியில் பேசிக்கொண்டோ, குறுந்தகவல் அனுப்பிக்கொண்டோ இருப்பார்கள். இதனாலும் விபத்துகள் நிகழும்.
உடல்வலி ஏற்படும்
கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்துப் பேசும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இப்படி தொடரும் பழக்கம் முதுகுவலியை நோக்கிக் கொண்டு சென்றுவிடும். தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ வேகமாக குறுந்தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தால், அது கை மூட்டு இணைப்புகளில் வலியாக மாறும்.
மனஅழுத்தம் அதிகமாகும்
தொடர்ச்சியான அழைப்புகள், வைப்ரேஷன்கள், நினைவூட்டல்கள் போன்றவை நாம் எப்போதும் மொபைல்போனுடன் வாழ்வது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றன. அது நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டதாக உணர்கிறோம். அதைப் பிரிந்திருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மனஅழுத்தம் உண்டாகிறது. தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.
மொபைல்
காது கேளாமை
காதுக்கு மிக அருகில் வைத்து தொடர்ச்சியாகப் பேசுவதால், மின்காந்த அலைகள் செவிப்பறையைத் தாக்குகின்றன. இதனால் நாளடைவில் காது கேளாமை பிரச்னை ஏற்படும்.
தோலில் அலர்ஜி ஏற்படும்
செல்போனை கண்ணைக் கவரும்விதத்தில் வடிவமைக்க நிக்கல், குரோமியம், கோபால்ட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை அலர்ஜியை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அடிமையாக மாற்றும்
கழிவறை, குளியலறை போன்றவற்றுக்கு போனை எடுத்துச் செல்லுதல், வீட்டில் வைத்துவிட்டு அலுவலகம் வந்தால் வெறுமையாக உணர்தல், புதிதாக நோட்டிஃபிகேஷன்கள் வராமல் இருந்தால் மனவருத்தம் அடைதல் போன்றவை நாம் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதற்கான அறிகுறிகள்.
அலைபேசி
என்ன செய்ய வேண்டும்?
* தலை மற்றும் உடல் பகுதிகளில் இருந்து மொபைல்போனைத் தள்ளிவைத்துப் பேச வேண்டும். இயர் போன், புளூடூத் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.
* படுத்துக்கொண்டே பேசும்போது போனை உடல் மீது வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
* மொபைல்போனுக்கு பதிலாக லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாம்.
* பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குறுந்தகவல்களில் உரையாடல்களை முடித்துக்கொள்ளலாம்.