Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 2, 2020

இனி 5 பேருக்கு மேல் எந்த இடத்திலும் கூடினாலும் கடுமையான நடவடிக்கை!


நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "நமது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு நிர்வாகம் பல நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளது.
144 தடை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமலும், சமூக இடைவெளியைத் தவிர்த்தும், உத்தரவுகளை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி ஐந்து நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும் எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்ட விரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். ஆகவே பொதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.
இனி 144 தடை உத்தரவு மீறி, ஐந்து நபர்களுக்கு மேல், எந்த இடத்திலும் எவ்வித காரணங்களுக்காகவும் பொதுமக்கள் கூடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஆகவே பொதுமக்கள் சட்டவிதிகளை மீறுவதைத் தவிர்த்து, இக்கொடிய தொற்று நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழக காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment