கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி செனை்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த மருந்து 2 ரூபாய்க்கு குறைவான விலையே கொண்டது எனவும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும் எனவும் இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசுத் தரப்பிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரரின் கோரிக்கை மனு, மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருந்து குறித்து ஆய்வு செய்வதற்கான மனுவை மீண்டும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது மனுவை விரைந்து பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என, மத்திய அரசுக்கும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment