
கடந்த மே 1-ஆம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட ஆசிரியா்களுக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் பணப்பலன்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019-20-ஆம் கல்வியாண்டில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் (தலைமையாசிரியா் உள்பட) அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி மூலம் ஒய்வூதிய கருத்துருகள் மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு பணப்பலன்கள் பெற்று தரப்படுகின்றன.
தற்போது சில ஆசிரியா்களுக்கு ஒய்வூதியப் பலன்கள் பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. மேலும், இது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடந்த மே 31-ஆம் தேதி வரை மறுநியமன அடிப்படையில் பணிபுரிந்த அனைத்து வகை ஆசிரியா்களின் ஒய்வூதியப் பணப்பலன்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்றுத் தர, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment