சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரித்தானியா, குறோளி தமிழ்க் கல்விக் கூடம் ஆகியவை இணைந்து அயல்நாடுகளில் தமிழ்க் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் உலகளாவியத் தமிழறிஞர்களையும் மாணவர்களையும் பெற்றோர்களையும் இணைத்து இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தல் பயிற்சியினை வழங்கி வருகின்றன. இன்று உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் தத்தமது நாடுகளில் தமிழ்க் கல்விக் கூடங்கள், தமிழ்ச் சங்கங்கள், கோவில்கள் ஆகிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி அதன் வாயிலாக அடுத்த தலைமுறையினருக்குத் தமது மொழியினையும் பண்பாட்டினையும் கற்பித்து வருகின்றனர்.
உலகளவில் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபட்டும் வரும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து அந்தந்த நாடுகளில் நிழவி வரும் மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை உருவாக்கும் நோக்கிலும், உலகளவில் தமிழ்ப் பயிற்றுவித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறைகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும், அதனை மேம்படுத்தும் வகையிலும், சிறந்த தமிழ் மொழிப் பயிற்றுநர்களை உருவாக்கும் நோக்கிலும் இந்த இணையம் வழி தமிழ்க் கல்விக் கூடல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக சிறப்புச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், நேர்காணல்கள், மொழிப் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியரும் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் பொறுப்பாளருமான முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் 2020 மேத்திங்கள் 31 அன்று அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பு எனும் பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வி எனும் பொருண்மையில் ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை அன்று ஆஸ்திரேலியவில் மெல்பர்ன் நகரில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலை, வள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குநர் நாகை கா. சுகுமாரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மொழி + பண்பாடு இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை, இந்த பண்பட்ட வாழ்க்கையில் பிறமொழிக் கலப்பும் பிற பண்பாட்டு நுகர்வும் தாய்த்தமிழகம் போன்றே அயலகச் சூழலிலும் வாழ்வியல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். அதனை தவிற்கும் பொருட்டு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு மொழியோடு பண்பாடும் கற்றுத் தரப்படுகின்றது. ஆடல் பாடல் வழியாகவும் மிகவும் இலகுவான மொழியியல் அணுகுமுறைகளைப் பின்பற்றி இங்குள்ள மொழிச் சூழலுக்கு ஏற்ப பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றன என அவர் தமது சிறப்புரையில் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயாராகவன் அவர்கள் பேசுகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தமைமையில் நடைபெற்று வரும் அம்மாவில் ஆட்சியில் அயலகத் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். பிரித்தானியாவில் தமிழ்ப் பணியினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துவரும் குரோளி தமிழ்க் கல்விக் கூடத்த்தின் இயக்குநர் செ. சிவசீலன் அவர்கள் இந்நிகழ்ச்சியினை எம்மோடு இணைந்து மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தமது முழு ஒத்துழைப்பினை நல்கி வருவதாகவும் இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் தமிழ் பயிற்றுநர்களும் பயனடைந்து வருகின்றனர் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.




No comments:
Post a Comment