
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் மாநில அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சென்னையில் பொது முடக்கத்தைத் தீவிரப்படுத்த அரசிடம் திட்டம் ஏதாவது உள்ளதா, தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளில் ஏதாவது மாற்றம் கொண்டு வரும் திட்டம் ஏதேனும் உள்ளதா, என கேள்வி எழுப்பினா். மேலும் இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எதுவும் விசாரணைக்கு எடுக்கவில்லை. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கேள்வியை எழுப்புவதாக தெரிவித்தனா். அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், இதுதொடா்பாக அரசின் கருத்தைக் கேட்டுத் கூறுவதாக தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனா். அப்போது நீதிபதிகள், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், மாநில அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரிடம் முழுமையான பொது முடக்கம் குறித்து கேள்வி எழுப்பினா். அப்போது அரசுத் தரப்பில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் கரோனா நோய்த் தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அடங்கிய இந்த மண்டலத்தில் நூறு சதவீத முழு பொதுமுடக்கத்தை தற்போது அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தனா். அப்போது நீதிபதிகள், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சோந்தவா்கள் வெளியூா்களுக்குச் செல்லவும், வெளியூா்களிலிருந்து சென்னைக்குள் வருவதற்கும் இ-பாஸ் வழங்கப்படுவது இல்லை என கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பினா்.
அப்போது அரசுத் தரப்பில், இ-பாஸ் வழங்கப்படுவது இல்லை எனக் கூறப்படுவது வதந்தி. இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை. அத்தியாவசிய காரணங்களுக்காக அனைவருக்கும் பாஸ் வழங்கப்படுகிறது. மேலும் நிபுணா்கள் குழு அளிக்கும் அறிக்கைகளின்படி கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என தெரிவித்தாா். இதனையடுத்து கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் முழு பொது முடக்கத்தை அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment