Join THAMIZHKADAL WhatsApp Groups
லண்டன் : கொரோனா பாதிப்புடன், ரத்தத்தில் மன உளைச்சல் ஹார்மோனான கார்டிசாலின் அளவு அதிகமாக இருப்பவர்களே அதிகளவில் மரணமடைவதாக இங்கிலாந்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசின் தாக்குதல், அறிகுறி போன்றவை பற்றி தினமும் புதுப்புது தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் வல்ஜித் தில்லோ தலைமையில் நடந்த ஆய்வு தொடர்பான முடிவுகள், ‘தி லான்செட் டயாபெட்ஸ் அன்ட் எண்டோகிரைனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோயின் தீவிரத்தை ஒருவரின் ரத்தத்தில் உள்ள கார்டிசால் ஹார்மோனை கொண்டு தீர்மானிக்கலாம். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அடையாளம் காணவும் கார்டிசால் அளவை பயன்படுத்தலாம். உடல்நலக் குறைவு, வளர்சிதை மாற்றம், இதய செயல்பாடு போன்றவற்றின் போது ஏற்படும் மன உளைச்சலை பொறுத்து நம் உடலில் கார்டிசால் சுரக்கிறது. இதில் இருந்து நமது நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலை பாதுகாக்கிறது. ஆரோக்கியமாக, ஓய்வாக இருக்கும் போது, கார்டிசால் அளவு 100-200 என்எம்/எல் என்ற அளவிலும், உறங்கும் போது பூஜ்ஜியமாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கார்டிசால் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ இரண்டுமே உயிருக்கு ஆபத்தாகி விடும். ஆய்வு செய்யப்பட்ட 535 கொரோனா நோயாளிகளில் 403 பேருக்கு கார்டிசால் அளவு பெரும்பாலும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. கார்டிசால் அளவு 744 அல்லது அதற்கு கீழ் இருக்கும் கொரோனா நோயாளி அதிகபட்சம் 36 நாட்களும், 744க்கு மேல் இருந்தால் அதிகபட்சம் 15 நாட்களும் மட்டுமே உயிருடன் இருக்க முடியும். எனவே, நோயாளிகளின் உடல்நிலை விரைவில் மோசமடையக் கூடும் என்பதை கார்டிசால் அளவை கொண்டு தீர்மானிக்கலாம். கொரோனா நோயாளி அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் கார்டிசால் அளவு மதிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment