Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 7, 2020

பிளஸ் 1 வகுப்பில் பழைய பாடத் தொகுப்புத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: பிளஸ் 1 வகுப்பில் பழைய பாடத் தொகுப்புத் திட்டமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அந்த உத்தரவு விவரம்: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் மன அழுத்தம், உயர் கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழு சில பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, இப்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மாணவர்கள் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத் தொகுப்பினையோ தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழி செய்யப்பட்டிருந்தது. இது நிகழ் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்த உத்தரவு வெளியிடப்பட்டது.

அரசுக்குக் கோரிக்கைகள்: மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மைப் பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் உயர் கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என அரசுக்குக் காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளைக் கொண்ட பாடத்திட்டத்தை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத் திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

கருத்துகள் ஏற்பு: பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைக் கல்விப் பாடத் திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மைப் பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால், மாணவர்களின் நலன் கருதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளைக் கொண்ட பாடத் திட்டமே அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தனது உத்தரவில் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment