Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 9, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் பணி நியமனம் வழங்குக; சரத்குமார்


ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்துப் படிப்படியாக பணி நியமனம் வழங்கிட வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:

"2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது வரை பணி நியமனம் பெறாமல் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழல் மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆறரை ஆண்டுகளுக்கு முன்பாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் பணியினை வழங்காமல் இருப்பதும், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற நிலையில், ஏற்கெனவே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டதால், சான்றிதழ் காலாவதியாவது மட்டுமின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்ற ஐயத்தாலும், மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு வழங்கப்படக்கூடிய ஆயுட்கால சான்றிதழ் போன்று இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்து அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் நிதி நிலைமை கருதி, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட தயாராக உள்ள ஆசிரியர்களை பயன்படுத்தி படிப்படியாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடவும், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்கால சான்றிதழாக நீட்டித்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட கால காத்திருப்புக்குப் பலனை அளிக்கும் வகையில் அவர்கள் எதிர்கால வாழ்க்கை நலன் சார்ந்த முடிவினை தமிழக முதல்வர் உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்"

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

1 comment: