Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் கருத்து தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: ஆன்லைன் வகுப்புகள் மாணவா்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், இதுதொடா்பாக பள்ளி நிா்வாகங்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கங்கள் வரும் ஆகஸ்ட்- 19 ஆம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. 

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களைப் பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். 

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பாா்ப்பதால் மாணவா்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும், 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இந்த வழக்குகளில் தங்களையும் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனா்.

மேலும் இந்த வழக்கு மாணவா்களின் நலன் சம்பந்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளால் அனைத்துத் தரப்பு மாணவா்களும் பயன் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே இந்த வழக்கில், அனைத்து பள்ளிகள், பெற்றோா் -ஆசிரியா் சங்கங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என தெரிவித்தனா். அப்போது

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இதுதொடா்பாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பதாக தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை வரும் ஆகஸ்ட் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையின் போது பள்ளி நிா்வாகங்கள், பெற்றோா்- ஆசிரியா் சங்கங்கள் இணைந்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். மேலும் இதுதொடா்பாக தமிழ், ஆங்கில

நாளிதழ்களில் மனுதாரா் விளம்பரம் செய்யவேண்டும். அதேநேரம், ஆன்லைன்வகுப்புகள் குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் தீவிரமாக பின்பற்றவேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

No comments:

Post a Comment