Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 7, 2020

நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவு



நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக அளவில் வெற்றி பெறச் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி துறையால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும். இதற்காக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே மாணவ, மாணவியர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருப்பர். ஏற்கெனவே சி.பி.எஸ்.இ. மூலம் நடத்தப்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி நுழைவுக்கானத் தேர்வு கடந்தாண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் டிசம்பர் மாதத்தில் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் பெறும்பணி நிறைவடைந்தது.

ஜூலை மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் தமிழக அரசு ஏழரை சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இதற்காக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விண்ணப்பித்த மாணவன் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்காக வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடம் சார்ந்த தலா 2 புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தை கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்து நீட் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வைக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாமக்கல் தெற்கு அரசு பள்ளி கலையரங்கில் 30 தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் கலந்து கொண்டார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 77 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் வெற்றிக்கு தலைமை ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்களும் பாடுபடவேண்டும். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்ற பெருமையை நாமக்கல் மாவட்டத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. இணைய வழி மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment