Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 10, 2020

நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நடைபெறும் : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்!!

கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த தடை கோரி, 20 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி தேர்வு நடக்கும் என உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு, வரும் 13ம் தேதியும், ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த மாதம் தேர்வு முகமை அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரளா உட்பட நாடு முழுவதிலும் உள்ள 11 மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடப்பாண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் ஜே.இ.இ தேர்வுகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், அதேப்போல் புதுவை அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 28ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு 20 மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய மனுக்கள் இன்று நீதிபதி அசோக் பூ‌‌ஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வை தள்ளி வைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுக்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளோம்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இனி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். நீட் தேர்வு தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுவிட்டதால் இந்த புதிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம், என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததால், நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment