Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 2, 2020

10 மாதங்களாக ஊதிய பாக்கி: புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்

பத்து மாத ஊதியம், ஓய்வூதியம் தராததால் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை கல்வித்துறை வளாகத்திலேயே தங்கியிருக்கும் போராட்டத்தை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் புதுச்சேரியில் நடத்தி வருகின்றனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை மாநிலத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கடந்த டிசம்பர் 2019 முதல் 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பான சம்பளக் கோப்பு உயரதிகாரிகளால் பல்வேறு முறை திருப்பி அனுப்பப்பட்டது. இறுதியில் ஆளுநராலும் சம்பளக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது .

இதற்கிடையே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் ஆசிரியர் பிரதிநிதிகளை அழைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, சம்பந்தப்பட்ட தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் ஊதியம் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் சம்பளக் கோப்பு தலைமைச் செயலரால் திருப்பி அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் வழங்கும் அரசு ஆணை, ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் வரை, கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திலேயே தங்கி இருக்கும் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கருப்புத் துணியால் கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை நடத்தினர்.

இதுகுறித்துப் புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் மீது வரவு ,செலவுக் கணக்குகளை முறையாகக் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.

தகவல்களைப் புதுவை அரசு நேரடியாக நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி, ஆய்வு செய்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நிர்வாகங்களிடமிருந்து தகவல்களைப் பெற ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டியதில்லை .

ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் அரசின் கருவூலத் துறை மற்றும கல்வித் துறை மூலம் சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. பள்ளியின் நிர்வாகங்களுக்கு இதில் ஒரு பைசா கூடச் செல்வதில்லை. நிர்வாகப் பிரச்சினையை எங்கள் ஊதியத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது" என்றனர்.

No comments:

Post a Comment