Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 18, 2020

மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வலியுறுத்தல்

மத்திய அரசு ஊழியர்களைப்போல் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று (அக். 18) நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், "அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக முதுகலை ஆசிரியராக இருந்தும், தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைக்கப் பெறாதவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்பிருந்ததுபோல், அலுவலகப் பணியாளர்களின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை உபரி பணியிடமாகக் கருதாமல் மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமன வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் பழைய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும்" ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் சி.சின்னப்பா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ந.ப.மா.மனோகரன், பொதுச் செயலாளர் செ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் நிறுவனர் கா.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment