Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 4, 2020

இருமலை நிறுத்த, நுரையீரலைச் சுத்தப்படுத்த, பல்வலிக்கு, மூட்டு வலிக்கு மருத்தாகும் கண்டங்கத்திரி

தரிசு நிலங்களில்கூட கண்டங்கத்திரி செடி இயல்பாய் முளைக்கும். இதன் ஆங்கிலப் பெயர் Wild Egg Plant என்று கூறுவர். தாவரவியல் பெயர் Solanum surretance ஆகும். கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்களும் உள்ளன. 'கண்டம்' என்பது கழுத்தைக் குறிக்கும். கழுத்துப் பகுதியில் ஏற்படும் குறைகளைச் சரிசெய்யும் தாவரம் கண்டங்கத்திரி. அதிக கபத்தைக் (சளி) கட்டுப்படுத்த உதவும் மூலிகை என்பதால், கபநாசினி என்ற பெயரும் உண்டு.

சுண்டைக்காய் அளவுக்குக் காய்கள் காய்த்து, அவை மஞ்சள் நிறத்தில் பழுக்கும். பார்ப்பதற்கு அடர்ந்த முட்களுடன் அச்சமூட்டும் தோற்றம் இச்செடிகளில் மகத்தான மருத்துவ குணம் இருக்கிறது. சொலனைன், சொலசொடைன், பீட்டா-கரோட்டின், கொமாரின்கள் போன்ற தாவர வேதிப்பொருள்கள் இதில் உள்ளன. பீட்டா-கரோட்டின், வைட்டமின் 'ஏ' ஆக மாறி உடலுக்கு நன்மை செய்யும்.

இருமலை நிறுத்தும்

கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தினந்தோறும் (1கிராம்) அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுத்து வந்தால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் குணமாகும்.

கண்டங்கத்தரி வேர், கோரைக் கிழங்கு, சிறுதேக்கு, சுக்கு, சிறுவழுதுணை வேர் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டுக் காய்ச்சி குடிநீர் வகை மருந்தாகப் பயன்படுத்த, வாத சுரம் உடலில் தங்காது. கண்டங்கத்திரி வேரைக் குடிநீரிலிட்டு, அதில் கொஞ்சம் திப்பிலிப் பொடியும் தேனும் கலந்து சாப்பிட, இருமல் மறையும்.

நுரையீரலைச் சுத்தப்படுத்தும்

சுவாச மண்டல பாதிப்புகளுக்கு கண்டங்கத்திரி நல்ல மருந்தாகும். நுரையீரலில் சளி சேராமல் இது அகற்றுகிறது. கண்டங்கத்திரி, நல்ல கோழை அகற்றி (Expectorant) என்று கூறுகிறார்கள். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்திப் பொடித்து அரை மேசைக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, இரைப்பு, இருமல் அறிகுறிகள் நன்றாகக் குறையும்.

கண்டங்கத்திரிப் பழத்தோடு தூதுவளைப் பழத்தையும் சேர்த்து உலர்த்தி, சிறிது மிளகுத் தூள் சேர்த்துச் சளி தொடர்பான நோய்களுக்கு முதலுதவி மருந்துப் பொடியாக வைத்துக்கொள்வது நல்லது.

கொரோனா கிருமி, நுரையீரலைப் பாதிப்பதால் இக்காலத்தில் கண்டங்கத்திரி நுரையீரலை ஆரோக்கியமாகக் காப்பதற்கு உதவும்.

பல்வலிக்கு மருந்து

பல் வலிக்கும், இது மருந்தாகப் பயன்படுகிறது. கண்டங்கத்திரி செடியை எரித்துச் சாம்பலாக்கி, அதைக்கொண்டு பல் துலக்கி வர, பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களைத் தடுக்க முடியும்.

சரும ஆரோக்கியம்

கண்டங்கத்திரி விதைகளை அரைத்து, தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகளில் தடவினால், அவை உடனே குணமாகும்.

மூட்டு வலி

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துப் பக்குவமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்குப் பூசி வந்தால் அவை நீங்கும்.

கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறு ஆகியவற்றை தலா(100 மி.லி) எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைல பதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக் கற்பூரம் தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடு செய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் சகலவலிகளும் உடனே குணமாகும்.

வியர்வை நாற்றம்

உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துப் பக்குவமாகக் காய்ச்சி வடித்துப் பூசிவந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

வயிற்றுக்குப் பாதுகாப்பு

செரிமானப் பகுதியில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்குக் கண்டங்கத்தரி உதவும். கிருமிகளை எதிர்த்துச் செயலாற்றக்கூடிய கண்டங்கத்திரி, வயிறு மற்றும் குடல் பகுதியில் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது.

சிறுநீர் பிரியும்

சிறுநீர் சரியாகப் பிரியாமல் அவதிப்படுவோருக்கு, சிறுநீர் பிரிப்பானாக (Diuretic), கண்டங்கத்திரி உதவி செய்யும். சிறுநீரடைப்பைச் சரி செய்ய, கண்டங்கத்திரி இலைச் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. ஆசனவாய்ப் பகுதியில் தோன்றும் அரிப்பு எரிச்சலைக் குணமாக்க, கண்டங்கத்தரி மலர்களை நல்லெண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி, அந்தப் பகுதியில் தடவலாம்.

மருந்து குழம்பு

கண்டங்கத்திரி வற்றலால் மருந்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் மாசடைந்த நுரையீரல் சுத்தப்படுத்தும். பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்குச் செரிமானத்தைத் துரிதப்படுத்தும் கண்டங்கத்திரிப் பழத்தைச் சமையலில் சேர்த்து வரலாம். இரைப்பு, இருமல், அரிப்பு ஆகியவற்றைப் போக்கும்.

No comments:

Post a Comment