Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 23, 2020

இனி மாநில மொழிகளிலும் JEE தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஜேஇஇ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி அடைவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க முடியும். இத்தேர்வு தற்போது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜேஇஇ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜேஇஇ மெயின் தேர்வுகள் இனிக் கூடுதலாக மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஜேஇஇ மெயின் தேர்வுகள் வருங்காலத்தில் மாநில மொழிகளில் நடத்தப்படும். மாநிலப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரப் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை அனுமதிக்கும் மாநிலக் கல்லூரிகளும் இதன்கீழ் இணைத்துக் கொள்ளப்படும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) ஜேஇஇ தேர்வுகளைக் கூடுதல் மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்துள்ளது'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment