Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 14, 2021

அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும், சிறப்பு வகுப்புகள் கூடாது - திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.


தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 'பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டி நடைமுறைகளை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 10 மாத இடைவெளிக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. வரும், 19ம் தேதி முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அதிகாரிகளால், நேற்று நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அறிவுரைகளும், வழிகாட்டி நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:

* அனைத்து மாணவர்களும், முக கவசத்துடன் மட்டுமே வர வேண்டும்...

* பள்ளி வளாகத்தில் நுழையும் போது, கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின்பே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

* மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது

.* பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும். மதிய உணவு எடுத்து வர அனுமதி வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில், மரத்தடியில் பாதுகாப்பான சூழலில் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்

* அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோரின் விருப்பம் பெற்ற பின்னரே, பள்ளிக்கு வர வேண்டும். அவர்களின் எழுத்துபூர்வமாக ஒப்புதல் கடிதம் எடுத்து வர வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை, பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது

* மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து, அச்சம் ஏற்படுத்தக் கூடாது. வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன்பின்னரே, பாடம் நடத்த வேண்டும்

* வளாகங்களில் ஒன்றாக கூடுவது, விளையாடுவது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. மாலை, காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது

* அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்றுத் தரும், அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பாடங்களை நடத்தினாலும், மற்ற ஆசிரியர்கள், பள்ளி சுமூகமாக இயங்க தேவையான பணிகளை பார்க்க வேண்டும்.இவ்வாறு, வழிகாட்டி நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment