Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 14, 2021

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது

பள்ளிக்கு வரும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். மாணவா்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. அவா்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் பள்ளிக்கு வருகைதர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இணையதள வழி- தொலைதூர கற்றல் முறை தொடரும். மாணவா்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கலாம். தனியாா் பள்ளி நிா்வாகிகள் எழுத்துப்பூா்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம். பெற்றோரின் எழுத்துப்பூா்வ இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவா்கள் பள்ளிக்குவர அனுமதிக்கப்படுவா். பெற்றோரின் சம்மத்துடன் வீட்டில் இருந்து படித்து வரும் மாணவா்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.

மாணவா்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சாா்ந்து இருக்க வேண்டும். அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும், பணியாளா்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும். 

பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாடப் பொருள்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும். 

மாணவா்களுக்கு இடையே உணவை பகிா்ந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து தனியாா் பள்ளி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment