Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 28, 2021

தமிழ்நாட்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் பாஸ்: பலனளிக்குமா? மேலும் சிக்கலை உருவாக்குமா?

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இரண்டு நாள்களில் சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நகைக் கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, இட ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் ஆளும் கட்சியினரிடையே வரவேற்பும், எதிர்க்கட்சிகளிடையே 'இது தேர்தல் ஸ்டண்ட்' என்ற விமர்சனத்தையும் பெற்றன.

ஆனால், 9, 10, 11 ஆம் வகுப்பு ஆல் பாஸ் அறிவிப்பு மட்டும் பொது மக்களிடையே விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. சென்னையில் தனியார்ப் பள்ளி அமைப்புகளும், ஆசிரியர்களும் இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் 9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் பிபிசி தமிழிடம் பேசினார்.

"9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு தேர்தலுக்கு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை. எந்த பள்ளி மாணவர்களும் தேர்தலுக்குச் சென்று வாக்களிக்கச் செல்வதில்லை. பல்வேறு அறிவிப்புகள் மூலம் தமிழக முதல்வரின் மதிப்பும், மரியாதையும் கூடி வந்த வேளையில் ஓட்டுக்காக இதைச் செய்தது மிகப்பெரிய தவறு. இந்த முடிவினால் எதிர்ப்பு அலை வீசச் செய்கிறது என்பதுதான் உண்மை. வேறு எந்த மாநிலத்திலும் தேர்வுகள் ரத்து செய்யவில்லை. அவசரப்பட்டு பள்ளி தேர்வு ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பல மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் ஊரகப்பகுதியில் கொரோனா தொற்று என்பது முழுவதும் குறைந்து இருக்கிறது. கிராமப் பகுதியில் கொரோனா அச்சம் அகன்று இருக்கிறது. தனியார் பள்ளிகளில் முகக் கவசம் கட்டாயம் அணிவதும், கிருமிநாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் சுகாதாரமாக வைத்திருக்கிறோம். இந்த நிலையில் அனைத்து பள்ளிகளையும் திறந்து வகுப்புகள் நடத்தவும், தேர்வுகள் நடத்தவும் அனுமதியளிக்க வேண்டும்" என்றார்.ஆல் பாஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரித்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் விசாலட்சுமி, "கடந்த ஆண்டு நோய்த் தொற்று அதிகமாக இருந்தது, ஆகையால் தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது சரியான முடிவாக இருந்தது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. தேர்வு நடத்தாமல் இருப்பதற்கு நோய்த் தொற்றைக் காரணம் காட்டுகின்றனர். ஆனால், தேர்வு அறையில் தகுந்த இடைவெளியில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவார்கள். இதனால் நோய்த் தொற்றைக்காரணம் காட்டி தேர்வை ரத்து செய்ததது தேவையில்லாத ஒன்று" என்றார்.

மேலும், "ஒன்பதாம் வகுப்புத் தேர்வு என்பது பள்ளி அளவில்தான் நடத்தப்படுகிறது. பொதுவாக, ஒன்பதாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை கல்வியைப் பெற்றால் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பில் பாடங்கள் புரிந்துகொள்ள முடியும். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வைத்தே பதினொன்றாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் சேரலாம் என்பதை முடிவு செய்கின்றனர். ஆகையால், பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மாணவர்களை எந்த வகையில் மதிப்பீடு செய்வது என்பது தெரியவில்லை" என்கிறார் விசாலட்சுமி.

வருத்தத்தில் பெற்றோர்கள்

தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பெற்றோர்களும் வருத்தத்தில் உள்ளதாக கூறுகிறார் நந்தகுமார்.

இது குறித்துப் பேசிய அவர், "9, 10, 11 வகுப்புத் தேர்வுக்கான தேர்வு ரத்து குறித்து அரசு எங்களிடம் எதையும் பேசாமலேயே முடிவெடுத்து இருக்கிறது. நாங்கள் மேற்கண்ட வகுப்புக்கான தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை வழங்கியும், தேர்வு கட்டணத்தையும் அரசிடம் செலுத்தி இருக்கிறோம். சென்ற ஆண்டும் தேர்வு கட்டணத்தைச் செலுத்திய பின்பு தேர்வு ரத்து செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர்வு ரத்து என்றால் மாணவர்கள் படிப்பதை மறந்தே விடுவார்கள். பள்ளிக்கூடமும் நடக்கவில்லை, பாடமும் நடத்த முடியவில்லை, தேர்வும் ரத்து என்றால் எப்படி மாணவர்கள் படிப்பார்கள் என்று பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்" என்றார்.

ஆன்லைன் வகுப்புகளில் கவனம் இல்லை

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் கவனம் குறைந்துவிட்டது என்று கூறும் நந்தகுமார், அரசுத் தொலைக்காட்சியும் எந்த அளவுக்கு பலனளித்தது என்று தெரியவில்லை என்கிறார்.

நந்தகுமார், "தற்போது நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பு என்பது மாணவர்களிடையே பெரிய அளவில் ஈர்ப்பில்லாமல்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தினார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் வகுப்பில் ஆர்வமில்லாமல் தான் இருக்கிறார்கள். மாணவர்கள் ஆன்லைன் வகுப்பைக் கவனிப்பதும் குறைந்திருக்கிறது. மத்திய அரசு தனது ஆய்வில் 92 சதவிகித மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று கண்டறிந்திருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சி ஆரம்பித்துள்ளோம் என்று சொன்னது அரசு. ஆனால், இந்த தொலைக்காட்சியை எத்தனை மாணவர்கள் பார்த்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால், இந்த காரணத்தைச் சொல்வது ஏமாற்று வேலைதான். அரசுப்பள்ளி மாணவர்கள் நிலை கேள்விக்குறியாக்கி விட்டது. தற்போது கிராமப்பகுதியில் மாணவர்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்," என்றார்.

கல்வி மேம்பட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசு பள்ளி ஆசிரியருமான சு. மூர்த்தி பிபிசியிடம் பேசிய போது, " கடந்த பத்து மாதங்களாக பள்ளியும் திறக்காமல் கற்பித்தலும் இல்லாமல் பொதுத்தேர்வு நடத்துவது என்பது சரியாக இருக்காது. ஆகையால், தேர்வு ரத்து என்பது வரவேற்கக்கூடிய விஷயம் தான் என்றாலும் பள்ளியிலேயே தேர்வு நடத்த வாய்ப்பு வழங்கி இருக்கலாம். 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து என்பது மாணவர்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது பிரச்னையில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகளை வைத்தே ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற கல்விநிறுவனங்களில் சேர்க்கை நடத்தப்படுகிறது. காவல்துறை, அஞ்சல்துறை, குரூப் 4 தேர்வுகளில் பத்தாம் வகுப்பின் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கேட்கப்படுகிறது. எல்லோரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட்டதால் மதிப்பெண் எப்படி கணக்கீடுவார்கள் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மாற்று ஏற்படாக பள்ளி அளவில் தேர்வு நடத்தவும், அக மதிப்பெண் வழங்கியும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

பள்ளிகள் மூடியே இருப்பதால் கிராமப்பகுதியில் அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் அடுத்த கல்வி ஆண்டில் இடைநிற்றல் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். எங்கள் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் பெருமையாக செல்போன் வாங்க வேலைக்கு செல்வதாக தெரிவித்தான். இவ்வாறு கேட்டபோது சமூக தாக்கத்தை புரிந்துகொள்ள வேண்டி இருந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளி வகுப்பு ஆரம்பிப்பது சரியானதாக இருக்கும்," என்றார் அவர்.

பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

பள்ளிகள் மூடியிருப்பதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் பெரும் சிரமத்தை சந்திப்பதாக சொல்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.

"பள்ளியே திறக்காதபோது, அரசு ஆல் பாஸ் என்று அறிவித்தபின்பு எதற்காகக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். சில நேரங்களில் சட்ட ஒழுங்குபிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. நாங்கள் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித ஊதியமாவது வழங்க வேண்டும், பிஎஃப், இஎஃப்ஐ செலுத்த வேண்டும், மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு 100% வரி செலுத்த வேண்டும். இல்லையேல் தண்டனை கட்டணம் செலுத்த வேண்டும் இதை எல்லாம் சொன்னாலும் பெற்றோர்கள் அதை ஏன் நாங்கள் செலுத்தவேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் பல பள்ளிகள் நிதி சிக்கலில் உள்ளன.

பத்து லட்சத்துக்கும் அதிகமான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் பணியாற்றிய இதர பணியாளர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. பள்ளி திறந்தால் மட்டுமே குறைந்தபட்ச கல்வியாவது வழங்க முடியும். தேர்தலுக்காக அவசர அவசரமாக எடுத்த தவறான முடிவு. மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வகுப்பறை தேர்வாவது நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்" என்கிறார் நந்தகுமார்.

No comments:

Post a Comment