Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 12, 2021

வாட்ஸ் ஆப்பில் ஹாய் அனுப்பினால் போதும் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு

கொரோனா பிரச்னையால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை தெரிவிக்கும் வகையில், தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் 'சாக்‌ஷம்' என்கிற பெயரில் இணைய முகப்பு சேவையை துவங்கியுள்ளது.

வேலைவாய்ப்புகளை தேடும் தொழிலாளர்கள் இந்த இணைய முகப்புக்கு வாட்ஸ் ஆப் மூலமாக ஹாய் என டைப் செய்து அனுப்பினால் போதும். தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட 'சாட்பாட்' சேவை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை அடுத்தடுத்து வழங்கும். இதன்மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் இருந்தபடியே, அவர்களை சுற்றியுள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த புதன்கிழமை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (Department of Science and Technology) இந்த சேவையை அறிமுகம் செய்தது. அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (Technology Information Forecasting and Assessment Council (TIFAC)) உருவாக்கியுள்ள ஷார்மிக் சக்தி மஞ்ச் (Shramik Shakti Manch) என்ற சேட்பாட் சேவையின் சுருக்கம் தான் சாக்‌ஷம் (SAKSHAM).

இதுகுறித்து பேசிய TIFAC நிர்வாக இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா, கொரோனோ பெருந்தொற்று காலத்தில் சாக்‌ஷம் சேவை குறித்த யோசனை எழுந்தது. தற்போது அது சாத்தியமாகியுள்ளது. இது நிச்சயம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு பயன் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனோ தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்கும் வேலையில்லாமல் போனது. அதனால் மீண்டும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பேருந்து, ரயில் என எவ்வித போக்குவரத்து சேவையும் இல்லாததால் தொழிலாளர்கள் நடந்து சென்று தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பம், குழந்தை, உடமைகள் அனைத்தையும் தோளில் சுமந்தவாறே பலநூறு கி.மீ நடந்தே சென்றது குறித்து வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உலகத்தையே உலுக்கின.

தொழிலாளர்கள் பலர் தற்போது தங்களுடைய சொந்த ஊர்களிலேயே இருந்தாலும், பலரும் வேலையில்லாமல் இருக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தினசரி சாப்பாட்டுக்கே அவர்கள் துன்பப்படும் நிலை நிலவுகிறது. இதை போக்கவே இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் வாயிலாக 7208635370 என்கிற எண்ணுக்கு ஹாய் என அனுப்பினால் போதும், அவர்களை சுற்றியிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கும். மேலும் இதற்கு பெரியளவில் டேட்டா தேவைப்படாது. நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த இணைய முகப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என TIFAC நிர்வாக இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஹாய் என்று அனுப்பினால், தொழிலாளர் குறித்து விவரங்கள் கேட்கப்படும். அதை தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு கொண்ட சேவை தொழிலாளர் இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள வேலைவாய்ப்புகளை அவருக்கு வழங்கும். இதன்மூலம் வேலை தேடும் தொழிலாளர் நிறுவனங்களை தொடர்புகொண்டு பேசலாம். தற்போதைக்கு இந்த சேவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. விரைவில் மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஒருவேளை இணைய சேவை இல்லாதவர்கள், 022-67380800 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு குரல்வழி மூலமாக வேலைவாய்ப்புகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment