Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 18, 2021

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு: சிசிடிவி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டம்.

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கீழ் 1,354 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி கடந்த கல்வியாண்டில் (2019-20) விடுதிகளில் 85,914 மாணவ, மாணவிகள் தங்கினர்.

இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் கட்டமைப்பு வசதிகளின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் விடுதிகளில் நிதி செலவினத்தை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நோக்கில் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை பெரும்பாலான விடுதிகள்முறையாகப் பயன்படுத்துவதில்லை. உணவுக்கான செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதையடுத்து முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கைவிரல் ரேகைப் பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் முறை என்பதால் அவை இணையவழியில் மாவட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயோமெட்ரிக் கருவியில் பதிவாகும் தகவல்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் வந்துவிடும். இதனால் வருகைப்பதிவு, திட்டசெலவின அறிக்கை, நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாவட்டஅலுவலகங்கள் மூலம் கண்காணிக்க முடியும்.

இதுதவிர வருகை அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படும். இதன்மூலம் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும், வெளிப்புற மாணவர்கள் விடுதிகளில் தங்குவதும் தவிர்க்கப்படும்.

வருகை பதிவைக் கொண்டு தினசரி செலவினங்கள் கணக்கிடப்பட்டு விடுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதனால் கூடுதல் மற்றும்தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளும் குறையும்.

அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment