Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 24, 2021

தேர்வு மையம் மாற்றம்: 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 25-ம் தேதிக்குள் பள்ளிக்குத் தெரிவிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், வரும் 25-ம் தேதிக்குள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அளிக்கும் கோரிக்கைக்கு ஏற்ப இம்மாதம் 31-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் தனது இணையதளத்தில் தேர்வு மையத்தை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள் ஒரு தேர்வு மையத்திலும், எழுத்துத் தேர்வை வேறு ஒரு தேர்வு மையத்திலும் இருந்தால், அவர்கள் ஒரே தேர்வு மையத்துக்கு மாற்றுமாறு கோரலாம். அதற்கான முறையான விண்ணப்பத்தைத் தாங்கள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 10-ம் தேதி நிறைவடைகின்றன. ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் தேர்வு மையத்தை மாணவர்கள் மாற்றுவது குறித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா வைரஸ் பரவல் காலத்தைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

சில மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதால், தாங்கள் பதிவு செய்த தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வு எழுத முடியாத சூழலில் இருப்பதாகவும், செய்முறைத் தேர்வுகளில்கூட பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் தங்களின் எழுத்துத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள தேர்வு மையம், செய்முறைத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள மையம் ஆகியவற்றின் விவரங்களைப் பயிலும் பள்ளிக்குத் தெரிவித்து மாற்றுமாறு கோரி வேண்டுகோள் விடுக்கலாம்.

ஆனால், செய்முறைத் தேர்வுக்கு ஒரு மையம், எழுத்துத் தேர்வுக்கு ஒரு மையம் என்று மாணவர்களுக்கு வழங்க முடியாது. இரு தேர்வுகளையும் ஒரே தேர்வு மையத்துக்கு மாற்றுமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கலாம். மாணவர்கள் வேண்டுகோள் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, பள்ளியிலிருந்து கடிதம் சிபிஎஸ்இக்கு வந்துவிட்டால், அதன்பின் தேர்வு மையத்தையும், நகரத்தையும் மாற்ற முடியாது.

மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குச் செய்முறைத் தேர்வு மையம் வெளியூரில் இருந்தால், பள்ளி நிர்வாகமே தேர்வு மையத்தை மாற்றும் வகையில் கோரிக்கை விடுக்கலாம்''.

இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் "இம்ப்ரூவ்மென்ட் தேர்வு" எழுத வேண்டுமானால் முன்பிருந்த நடைமுறையின்படி ஓராண்டுக்குப் பின்புதான் எழுத முடியும். ஆனால், இந்தக் கல்வியாண்டு முதல் அந்த ஆண்டிலேயே இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதும் வசதியையும் சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது ஒரு பாடத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் சிபிஎஸ்இ தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment