Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 23, 2021

11ஆம் வகுப்பு செல்ல மாணவர்களுக்கு தகுதித்தேர்வு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் 11ம் வகுப்பில் சேரும் போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை வழங்க முடியும். தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

எனவே, அரசாணையை ரத்து செய்ய முடியாது. அதேசமயம், 10ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம். இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment