Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 13, 2021

நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்: பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அகில இந்தியப் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே 4-ல் தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணையவழியில் நடத்த வேண்டும் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மத்திய அரசுக்கு மனுக்கள் அனுப்பி வலியுறுத்தினர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அகில இந்தியப் பெற்றோர் சங்கம் நேரடியாகப் பொதுத் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், ''10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு பதிலாக அக மதிப்பீடு மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க வேண்டும். சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி வாரியங்கள் மற்றும் பிற கல்வி வாரியங்கள் இதைப் பின்பற்ற பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் அவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, பல்வேறு நாடுகள் அக மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி தேர்ச்சி அளித்து வருகின்றன. அதனால் நீங்கள் (பிரதமர்) இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து மாநில அரசுகளிடமும் கலந்து பேசி, ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறையைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்வி ஆண்டைக் காப்பாற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திட்டமிட்டபடி பொதுத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ வாரியங்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் சம்பந்தப்பட்ட வாரியங்களால் செய்யப்பட்டு வருகின்றன.

தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் சிபிஎஸ்இ, தனது தேர்வு மையங்களை 40- 50% அளவுக்கு அதிகப்படுத்தியுள்ளது. தற்போது சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment