அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - முதல்வர் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, April 13, 2021

அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - முதல்வர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடனான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

 ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணி குறித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிற மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களுக்கும், மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், தலைமையுரை ஆற்றிய மரியாதைக்குரிய தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்களுக்கும், இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கு பெற்றிருக்கின்ற மதிப்பிற்குரிய அரசு ஆலோசகர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப., அவர்களுக்கும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களுக்கும், முதன்மைச் செயலாளர்களுக்கும், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் என்னுடைய முதற்கண் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாண்புமிகு அம்மாவின் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதை படிப்படியாகக் குறைத்தோம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்குத் தேவையான மருந்துகள் கொள்முதல், மருத்துவ உபகரணங்கள், N-95 முகக்கவசம், மும்மடி முகக்கவசங்கள், முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டு, அவையெல்லாம் கொள்முதல் செய்யப்பட்டு, தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதோடு, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் மருத்துவர் நிபுணர் குழு கூடி ஆலோசித்து,அந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸ் பரவலை படிப்படியாகக் குறைத்தோம்.

என்னுடைய தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களும், 14 முறை மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், நானே அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த நல்ல பல கருத்துகளை, ஆலோசனைகளை வழங்கி, மாவட்ட நிர்வாகமும் சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தது.

அதோடு, தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கம் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்பட்டு இந்நோய்ப் பரவலை கட்டுக்குள் வைத்திருந்தோம்.இந்தியா முழுவதும் படிப்படியாகக் குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பல வட மாநிலங்களில் அதிகரித்த நிலையிலே காணப்பட்டு வருகிறது.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு நோய்த் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 400-லிருந்து 450 வரை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுவந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் சுமார் 6,618 நபர்களிடம் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் இந்தத் தொற்று கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம், இருவேளையும் கிருமிநாசினி தெளிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படி, ரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு, கொரோனா தொற்று வராமல் தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10-04-2021 வரை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 92 ஆயிரத்து 682 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை 4 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 215 நபர்கள். இதில், நோய்த் தொற்று கண்டறிப்பட்டோர் எண்ணிக்கை 14,47,069 நபர்கள். 261 ஆய்வகங்கள், குறிப்பாக 69 அரசு மற்றும் 192 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

அதிகளவில் RT-PCR பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை தமிழகத்தில் 2.05 கோடி நபர்களுக்கு சுகூ-ஞஊசு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே RTPCR பரிசோதனை அதிகமாக மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தற்போது நாளொன்றுக்கு சுமார் 85,000 மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மொத்த பரிசோதனைகளில் 78 விழுக்காடு அரசு பரிசோதனை நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் பரிசோதனைகளை குறைத்த போதும், தமிழ்நாடு அரசு துணிச்சலாக அதிக அளவில் RT-PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 80,284 படுக்கைகளும் இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 32,102 படுக்கைகளும், வசதி கொண்ட 6,997 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயிர்காக்கும் உயரிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. டொஸிலிசுமாப் 400 எம்ஜி, ரெம்டெஸ்விர் 100 எம்ஜி, இனாக்சபெரின் 40 எம்ஜி போன்ற உயரிய மருந்து வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மருந்துகள், பரிசோதனை கருவிகள், N95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்முடி முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் தொடர்ந்து கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளோம். களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மைக்காக அலோபதி மருத்துவத்துடன் - இந்திய முறை மருத்துவ சிகிச்சை - நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது, தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாண்புமிகு அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள், கூடுதலாக களப் பணியாளர்கள் நியமித்தல் - காய்ச்சல் சிறப்பு முகாம்கள் - ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஏற்கனவே கொரோனா நோய்ப் பரவலை நாம் கட்டுப்படுத்தியிருந்தோம்.

தற்போது, படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. RTPCR பரிசோதனைகள், கோவிட் தடுப்பு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பாராட்டி, தமிழ்நாட்டை போல் பிறமாநிலங்களும் செயல்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தடுப்பூசி - முன்னேற்பாடு நடவடிக்கை - மாவட்ட அளவிலான குழு அமைப்பு - மக்கள்தொகையில் 20 சதவீதமான 1 கோடியே 60 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, 10-4-2021 வரை 37.80 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு, முகக்கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று நிலையைப் பொறுத்தவரை, நோய்த் தொற்று 4.55 சதவிகிதம், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 41,955, இறப்புவிகிதம் 1.38ரூ, குணமானவர்களின் எண்ணிக்கை 8,78,571 நபர்கள், குணமானவர்களின் சதவிகிதம் 94.12ரூ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகள் மூலமாக 8 கோடியே 41 லட்சம் முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க நிவாரணமாக ஏப்ரல் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 17 அமைப்புசாரா வாரியத் தொழிலாளர்கள், 14 நலவாரியத் தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் 35.65 இலட்சம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2000 ரூபாய், மேலும் 13.30 இலட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் நபர்களுக்கு மாண்புமிகு அம்மாவின் அரசால் உணவு வழங்கப்பட்டது.

2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500/- ரூபாய் ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கி கொரோனா காலத்திலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்பதற்காக அம்மாவின் அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியது.

இணையவழி வகுப்புகளில் 9.69 லட்சம் ஏழை, எளிய மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, நாள் ஒன்றுக்கு 2ழுக்ஷ டேட்டா ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்கப்பட்டது. இப்படி பல வகைகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசால் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் இப்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய். இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கின்றார்கள்.

இதையெல்லாம் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து அரசு அறிவித்த வழிகாட்டுதல் முறைகளை தவறாமல் கடைபிடித்து செயல்படுத்த வேண்டுமென்று பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அதோடு காய்ச்சல் முகாம்கள் அதிகமாக நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது சென்னை மாநகரத்தில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, 400 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்ற பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதேபோல சென்னை மாநகரத்திலும், பிற மாநகரப் பகுதிகளிலும் நம்முடைய அரசால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களின் மூலமாக வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்படி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவற்றை தொடர்ந்து செயல்படுத்தினால்தான் கொரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். அதோடு, பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், பொது இடங்களில் மக்கள் கூடும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல, உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இது ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. அந்த கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் கூட, சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று கண்கூடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அண்மையில் கூட, தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்திருக்கின்றார். இதை பொதுமக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பொதுமக்கள் இந்த நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த கொடிய நோயினால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றார்கள்.

ஆகவே, தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒருவர் கூட இறக்கக்கூடாது, அதை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும், அனைவரும் நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்போடு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.

மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொள்வது என்னவென்றால், உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும், சிந்தித்தால் நிச்சயமாக அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஆகவே, நான் பொதுமக்களை தொடர்ந்து அன்போடு வேண்டி கேட்டுக் கொள்வது, அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொருட்களை வாங்குகின்றபோது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து வீட்டிற்கு சென்றவுடன், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அதோடு, அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, தொழிற்சாலைகள், உணவுக்கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதியிலுள்ள நிறுவனத்தின் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், அரசு அதற்கு தயாராக இருக்கின்றது.

அந்தந்த தொழிற்சாலையைச் சேர்ந்த நிர்வாகம் அரசு மருத்துவமனையை அணுகினால் அங்கேயே வந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கின்றேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad