Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

பிளஸ் 2 தேர்வை நடத்துவதா; ரத்து செய்வதா? மத்திய கல்வி துறையிடம் ஆலோசிக்க முடிவு.

பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து, மத்திய கல்வித் துறையின் ஆலோசனையை பெற, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரத்தால், மாநிலம் தழுவிய ஊரடங்கு அமலாகி உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன.

'ஆல் பாஸ்'

பிளஸ் 1 வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு மட்டும் இம்மாதம் 5ம் தேதி நடத்தவிருந்த பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவலின் தீவிரத்தால், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலைமை சீரானதும் தேர்வை நடத்தலாம் என திட்டமிடப்பட்டது.

ஆனால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தாமதமின்றி தேர்வை நடத்த வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.

வழிகாட்டுதல் தேவை

தமிழகத்திலும், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதா அல்லது நடத்துவதா என, தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கருத்துருக்கள் தயார் செய்துள்ளனர். இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு, மத்திய அரசின் கல்வித் தகுதி விதிகளின்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசின் விதிகள் பின்பற்றப் படுகின்றன.பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து 'ஆல் பாஸ்' வழங்கினால், மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுரையை பெற, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படலாம்; இல்லையெனில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment