Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 20, 2021

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு 5 பேர் பாதிப்பு

சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் ஐந்து பேர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். 

கண் பார்வை பாதிக்கக்கூடியது என்பதால், கொரோனா நோயாளிகள், மீண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில், சமீப காலமாக, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக, கர்நாடகா, உத்தரகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில், கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் பாதிப்பு, தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து சர்க்கரை நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. 

இந்த நோய், காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்கக் கூடியது என்பதால், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள, பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'மியூகோர்மைகோசிஸ்'இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள்கூறியதாவது:

பூஞ்சை தொற்று காரணமாக, கறுப்பு பூஞ்சை அல்லது, 'மியூகோர்மைகோசிஸ்' நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வாயிலாக, கறுப்பு பூஞ்சை மனிதர்களுக்கு பரவுகிறது. 

வெட்டு, தீக்காயங்கள் வாயிலாக, தோலில் நுழையும் பூஞ்சை, பின், தோலின் மீது மேலும் பரவுகிறது.

சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. 

தீவிர தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, அதிகளவில் ஸ்டிராய்டு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை எளிதில் கறுப்பு பூஞ்சை நோய் தாக்கும்.

இந்நோய், கொரோனா தொற்றுடன் இருக்கும்போதும், மீண்டு வந்த பின்னும் தாக்கக் கூடியதாக உள்ளது.

டுமையான தலை வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்னை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கறுப்பாக மாறுதல் போன்ற வைகள், இதற்கு அறிகுறிகளாக உள்ளன.

இந்நோயை, ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால், கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், மிகவும் கவன மாக இருக்க வேண்டும். எவ்வித மருந்தையும் தன்னிச்சையாக எடுக்காமல், டாக்டரின் ஆலோசனைப்படி, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள், பாதிப்பு குறித்து, மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். 

இதற்கான மருத்துவ முறைகள் குறித்தும், மத்திய அரசு விரைவில் வழிக்காட்டுதல்கள் வழங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அச்சம் வேண்டாம்!சென்னை, அகர்வால் மருத்துவமனைகள் குழும தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படாது.

அதனால், யாரும் அச்சமடைய வேண்டாம். புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பிரச்னை உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதேபோல், இணை நோய்கள் இல்லாதவர்களும் தீவிர தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற நபர்களுக்கு, தீவிர தொற்றால் நுரையீரல் பாதிப்பு இருப்பதால், ஆக்சிஜன் வசதியுடனும் சிலருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் உயிரை காப்பாற்ற, அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. 

இதன் வாயிலாக அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்று இருந்து குணமடைந்த பின், எளிதாக கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய், உடலில் எந்த பகுதியிலும் ஏற்படலாம். எலும்புகளை கூட அரிக்கும் தன்மை பூஞ்சைக்கு உள்ளது.

குறிப்பாக, தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, மூக்கு, வாய், கண்களின் கீழ் முகத்தில் பூஞ்சை ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால், பூஞ்சை அரித்து கொண்டு, கண்களுக்கு சென்று, பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும். 

அப்போது, கண்ணை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி கண்ணை எடுக்கவில்லை என்றால், பூஞ்சை மூளைக்கு சென்று விடும்.மூளையை பாதிப்படைய செய்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தும். அதனால், தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment