அரசு கல்லுாரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசின் உயர்கல்வித்துறை கிடப்பில் போட்டுள்ளதால் விரக்தியடைந்துள்ளனர்.தமிழகத்தில் 149 அரசு கல்லுாரிகளில் 5,500 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு முறை (2015ல்) மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு பின் தேர்வு நடத்தப்படவில்லை. 2019ல் 2332 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், யு.ஜி.சி., தகுதி பெற்ற (பல்கலை மானியக்குழு) தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தினர். கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய, சிறப்பு டி.ஆர்.பி., தேர்வினை நடத்த அரசு திட்டமிட்டு 2021 பிப்., 23 முதல் 26 வரை சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தினர்.அதற்கு பின் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பணி நிரந்தரம் செய்யும் பணியை உயர்கல்வித்துறை கிடப்பில் போட்டது.தற்போதய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய டி.ஆர்.பி., அல்லது டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
இவரது அறிவிப்பிற்கு பின்னர் எந்தவித பணியும் நடக்காததால், அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் காலி பணியிடத்தால் உயர்கல்விக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொது செயலாளர் ஆர். தங்கமுனியாண்டி கூறியதாவது, அரசு கல்லுாரிகளில் யு.ஜி.சி., தகுதி முடித்து, பல ஆண்டுகளாக பணிபுரிகிறோம்.இதில், பலர் நாற்பது வயதை கடந்துள்ளனர். உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கிறது. விரைந்து கவுரவ விரிவுரையாளர்களுக்கான சிறப்பு டி.ஆர்.பி., தேர்வினை நடத்தி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment