Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 21, 2021

செப்.1-ல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி; ஏற்பாடுகள் தயார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

''இப்போது வரை செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. முதல்வரும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். பள்ளிகளைத் திறப்பதற்குத் தேவையான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. நாங்களும் அதை ஆய்வு செய்து, அதில் புதிதாக எதையாவது சேர்க்க வேண்டுமா அல்லது அதை அப்படியே பின்பற்றலாமா என்று யோசித்து வருகிறோம்.

வகுப்பில் மாணவர்கள் இடைவெளி விட்டு உட்கார வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும், அவர்களுக்குத் தேவையான கிருமி நாசினிகள் வழங்கப்பட வேண்டும், பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு பள்ளிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதி அன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பதில் எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம்.

புதிய ஆசிரியர் நியமனம்

பள்ளிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறோம். பணி நிரவல், கலந்தாய்வு ஆகியவை முடிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுக்கு மேலும் எவ்வளவு ஆசிரியர்கள் பணியிடங்கள் தேவை என்பதை முடிவு செய்து அதற்கேற்றாற் போல ஆசிரியர் நியமனம் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment