Monday, August 30, 2021

செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி ,கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் மாணவர்களுக்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும், 50 விழுக்காடு மாணவர்கள் சுழற்சி முறையில் வகுப்பில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.