Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 11, 2021

பள்ளி செல்லா மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி: பிரத்யேகச் செயலி மூலம் தொடக்கம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது.

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாகக் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இன்று முதல் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி இன்று முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் 2,280-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றிக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ’சர்வே ஆப்’ மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பள்ளி செல்லா மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment