JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புரதச்சத்து மிகுந்த பயறு வகைகளைக் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்து பொது விநியோக முறையிலும், மதிய உணவுத் திட்டத்திலும் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
''பயறு வகைகளின் மகசூல் குறைவாக இருப்பதாலும் பெரும்பாலும் அவை தரிசு நிலங்களிலேயே பயிரிடப்படுவதாலும், போதிய அளவு நமக்கு அவை விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இதை மாற்றும் நோக்கத்துடன், அதிக மகசூல் கொடுக்கக்கூடிய புதிய ரகங்களை நாம் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கவேண்டும். பயறு வகைகளை நெல் விவசாயிகள் வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும், கலப்புப் பயிராக வளர்க்கவும் விதை மானியம் போன்றவை அளித்து ஊக்கப்படுத்தப்படும்.
இத்தகைய புரதச்சத்து மிகுந்த பயறு வகைகளைக் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்து பொது விநியோக முறையிலும், மதிய உணவுத் திட்டத்திலும் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்குக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அரசின் இச்செயல்பாடானது, பயறு வகைகளுக்கான வெளிச்சந்தை விலையினை நிலைப்படுத்துவதுடன், விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும் உறுதுணை புரியும். இத்திட்டம் 45 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.''
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment