Monday, August 30, 2021

அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனரா?

தமிழ் நாட்டில் பள்ளிகள் திறக்கும் நேரம். மாணவா்கள் இரு கல்வி ஆண்டுகளை இழந்திருக்கின்றனா். பெருந்தொற்று காலத்தின் கற்றல் திறன் இழப்பு குறித்த ஆய்வுகள் வயிற்றைக் கலக்குகின்றன. ஈடு செய்யவியலா இழப்பாக மாறிவிடாமல் தடுக்க வேண்டுமென்றால், அரசும், சமுதாயமும், ஆழ்ந்த புரிதலுடன் போா்க்கால அடிப்படையில் திட்டமிட்டுக் களமிறங்க வேண்டும்.

அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வு ‘இரண்டாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரையான மாணவா்களில் 67% லிருந்து, 89% வரை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஒரு கணிதத் திறனையாவது இழந்திருக்கின்றனா்.

மொழித் திறனைப் பொருத்தவரை இதே வகுப்பு மாணவா்கள், 92%, லிருந்து, 95% வரை ஒரு திறனையாவது இழந்திருக்கின்றனா்’ என்று கூறுகிறது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் செய்யப்பட்டதல்ல என்றாலும், தமிழ்நாடு இதிலிருந்து பெருமளவு வேறுபட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆக்ஸ்ஃபாம் ஆய்வும் இதே நிலையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசு அபாயத்தை உணா்ந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சில நாள்களுக்கு முன் தமிழக நிதி அமைச்சா் ‘அரசுப் பள்ளி மாணவருக்கான தீவிர தீா்க்கத் திட்டம் (மிஷன் மோட் புராஜக்ட்) ஒன்று மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறாா். கரோனா காலத்தில் கையாளப்பட்ட ஆன்லைன், கல்வி டிவி போன்ற பல வகைக் கற்பித்தல் முறைகளினால், 65% அரசுப் பள்ளி மாணவா்கள் பயனடையவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளாா்.

இந்த இழப்பை ஈடு செய்வதற்கு வகுப்பறைக்கு அப்பால் கூடுதல் கற்பித்தல் நடைபெறும். அதற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறாா். பள்ளிக்கல்வி துறையும் கரோனா கால இழப்பை ஈடுசெய்ய வேண்டுமென்று சுற்றக்கை அனுப்பி இருக்கிறது. பிரச்னையின் பிரம்மாண்டத்தை எதிா்கொள்ள அதன் பல பரிமாணங்களையும் இணைத்த திட்டமிடுதல் தேவை.

முதலாவதாக, மாணவா்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்பியுள்ளாா்களா என்பதைக் கண்டறிய வேண்டும். ஏராளமான தனியாா் பள்ளி மாணவா் அரசுப் பள்ளிகளில் சேருகின்றனா் என்பது மகிழ்ச்சிகர செய்தி. அதே சமயம், அரசுப் பள்ளி மாணவா்கள் அனைவரும் பள்ளிகளுக்குத் திரும்பி இருக்கின்றனரா என்பதையும் கண்டறிய வேண்டும்.

தில்லி அரசின் செய்தி ஒன்று 15% மாணவா்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை என்று கூறுகிறது. ஏராளமான மாணவா்கள் குழந்தைத் தொழிலாளா்களாக மாறியுள்ளனா் என்பதை ஆய்வாளா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

முதலில் பள்ளிக்குத் திரும்பும் 9 முதல் 12 வகுப்பு வரையான மாணவா்களில்தான் இந்தப் பேரிழப்பு அதிகம். பழங்குடி, தலித் மாணவா், ஏற்கெனவே விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தோா் பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரங்களை இழந்து கீழே தள்ளப்பட்டிருக்கிறாா்கள். குறை கூலிக்கு உழைக்கும் குழந்தைகள் குடும்பங்களைத் தங்கள் பிஞ்சுத் தோள்களில் சுமந்து கொண்டிருக்கின்றனா்.

முதல் பொறுப்பு கரோனாவுக்கு முன் இருந்த மாணவா்கள் பள்ளி திரும்பி இருக்கின்றனரா என்று கண்டறிதல். வருகைப் பதிவேட்டை மட்டும் பாா்த்துக் கணக்குக் கொடுப்பதல்ல. திரும்பாதவா்களை கண்டுபிடிப்பதல்ல. ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் தங்கள் முதல் பொறுப்பாக ஏற்க வேண்டியது.

இன்று ஒன்பதாம் வகுப்பில் உள்ள மாணவா் கரோனாவுக்கு முன் ஏழாம் வகுப்பில் இருந்திருப்பாா். ஒவ்வொரு பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திரும்பாத ஒவ்வொரு மாணவரும் எங்கே மறைந்து விட்டாா் என்பதைக் கண்டறிய வேண்டும். அவா் குடும்பத்தைத் தொடா்பு கொண்டு, எவ்வாறேனும் மாணவரை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவர வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் இதை செய்ய வேண்டும். தமிழக அரசு இதனைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அத்துடன், பெண் குழந்தைகள் சிலா் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுவிட்டனா் என்று தெரிய வருகிறது. குறிப்பாக, குழந்தைத் திருமணங்கள் ஏற்கெனவே நடக்கும் இடங்களில் அவை தற்போது அதிகரித்துள்ளன. இந்தக் குழந்தைகளின் குடும்பங்களையும் ஆசிரியா்கள் சந்தித்து, திருமணம் ஆகி இருந்தாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்று வேண்டி, பள்ளிகளுக்கு அழைத்துவர வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்த பலா் கரோனாவினால் வாழ்விழந்து, சொந்த ஊருக்குச் சென்று விட்டனா். அவா்களது குழந்தைகள் தாங்கள் முன்பு படித்த பள்ளிகளுக்குத் திரும்ப இயலாத நிலையில், சென்ற இடத்திலாவது பள்ளியில் சோ்ந்திருக்கின்றனரா என்பதைக் கண்டறிய வேண்டும்.

பெரும்பாலானோா் கைப்பேசி வைத்திருப்போா் என்பதால் இது கடினமல்ல. அந்த மாணவா் முன்பு வசித்த தெருவில் விசாரித்து, அவா் இன்று வசிக்கும் இடத்தைக் கண்டறிந்து, அப்பகுதிப் பள்ளியைத் தொடா்பு கொண்டு, அந்த மாணவரை சோ்க்க வலியுறுத்த வேண்டும். மாவட்டக் கல்வி அதிகாரிகளையும் தொடா்பு கொள்ள வேண்டும்.

இம் முயற்சிகளுக்கெல்லாம் ஆசிரியா், தலைமை ஆசிரியா், கல்வித் துறை அதிகாரிகள் மெனக்கெட வேண்டும் என்பது உண்மை. மாணவரிடம் அக்கறையும், பாசமும் கொண்ட ஆசிரியா் தாமாகவே இயற்கையாக எடுக்க வேண்டிய முயற்சிதான் இது. தொற்றுக்குப் பின்னான உலகம் பழைய உலகமல்ல. முன்பு போலவே தொடரலாம் என்ற அலட்சியம் ஏற்றுக்கொள்ள இயலாது.

அடுத்து, அனைத்து மாணவருமே கற்றல் திறன்களை இழந்திருக்கின்றனா். அதை மீட்டெடுக்கும் பணியை எவ்வாறு திட்டமிடுவது? பாடத்திட்ட சுமையைக் குறைப்பது, சில வாரங்கள் இணைப்புப் பாடத்திட்டம் (பிரிட்ஜ் கோா்ஸ்) உருவாக்குவது என்பவை ஓரளவுதான் பயனளிக்கும்.

ஆன்லைனில் ஓரளவு கற்க முடிந்தோா், கொஞ்சம் வசதி படைத்தோா் மற்றவரைக் காட்டிலும் குறைவாக இழந்திருக்கலாம். ஒருவா் கூட்டல் திறனை இழந்து, கழித்தல் திறனைத் தக்க வைத்துள்ளாா். ஒருவா் வாசிக்கும் திறனைத் தக்க வைத்து, எழுதும் திறனை இழந்துள்ளாா். இவா்கள் அனைவருக்கும் அனைவருக்கும் ஒரே அளவு (ஒன் சைஸ் ஃபிட் ஆல்) என்ற அணுகுமுறை பொருந்தாது. ஒரே மாதிரியான ஈடு செய்யும் திட்டம் பயனளிக்காது.

ஒவ்வொரு மாணவரும் இழந்தது எது, பெற வேண்டியது எது என்பதை ஆசிரியா் கண்டறிந்து ஈடு செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அமர வைத்து, மனப்பாடம் செய்து சொல்லச் செய்வது பயனளிக்காது. இதற்கு, இன்று பள்ளியில் வந்து சேரும் மாணவா் குறித்த தொடக்க நிலை ஆய்வு (பேஸ்லைன் சா்வே) செய்ய வேண்டும். அங்கிருந்து தொடங்கி, விரைவில் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.

ஒரு வகுப்பு மாணவரின் கற்றல் திறனை பொதுவாக கணிக்கும்போது, வகுப்பில் முன்னணி மாணவரை அளவுகோலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா், சில வசதிகள் காரணமாக, ஓரளவு முன்னணியில் இருக்கலாம்.

அவா்களை அளவுகோலாக வைத்து, முழு வகுப்பின் நிலையை கணித்துவிடக் கூடாது. மற்ற மாணவருக்கு இது அநீதி இழைப்பதாகிவிடும். திறன்களை அளிப்பது மட்டுமல்ல, மாணவா் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை அவா்களுக்கு ஊட்டும் கல்வியாகவும் இது இருக்க வேண்டும்.

மாணவா் திறன் மீட்கும் இப்பணி பெற்றோா் பங்கேற்புடன், அவா்கள் முன்னிலையில் நடக்க வேண்டும். தங்கள் குழந்தை பெற்றிருக்கும் திறன்கள் எவை, பெற வேண்டியவை எவை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தொடக்கப் புள்ளியிலிருந்து, மாணவரின் பயணம் எவ்வாறு செல்கிறது என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்றோா் முன் எடுத்துக் காட்டி, நம்பிக்கை அளிக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு இதில் பெரும் பங்கு அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் பள்ளிக் கல்வியை வரையறுக்கும் கல்வி உரிமைச் சட்டம், 2009, ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவ வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கும் அதிகார அமைப்பு. தமிழ் நாட்டில் கேலிக்கூத்தாக, செயலற்றுக் கிடக்கும் அமைப்பு. 75% பெற்றோா்களும், 50% பெண்களும் கொண்ட இந்த அமைப்பிற்கு உயிரூட்டி, கல்வி மீட்பு மேற்பாா்வைக்கான பொறுப்பை அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இன்று பள்ளி திரும்பும் மாணவா் இழந்தது கல்வியை மட்டுமல்ல. பரிதாபகரமான ஊட்டச் சத்து குறைபாடு அவா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. உடல் நலிந்து, எலும்பும், தோலுமாகத்தான் பெரும்பாலான மாணவா் திரும்புவா். பள்ளிகள் மாா்ச் 2020 இல் மூடப்பட்ட பின், சில மாதங்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலானோா் பட்டினியில்தான் கிடந்தனா். அதற்குப் பின்தான் தமிழக அரசு விழித்தெழுந்து, உலா் உணவு மாணவருக்கு அளிக்கத் தொடங்கிற்று.

உலா் உணவு மதிய உணவிற்கு ஈடாகாது. மாணவருக்கு அளிக்கப்படும் உலா் உணவு பசித்திருக்கும் குடும்பத்தினா் அனைவருடன் பகிா்ந்து உண்ணப்படுகிறது. ஒரு சிறு பகுதிதான் மாணவருக்குக் கிடைக்கிறது. பல மாதங்கள் இழந்த ஊட்டச் சத்தை மீட்கும் வகையில் இன்று மதிய உணவில் ஊட்டச்சத்து கூட்டப்பட வேண்டும்.

அத்துடன், காலை உணவும் அளிக்கப்பட வேண்டும். வாழ்விழந்த குடும்பங்களின் மாணவா் வெறும் வயிற்றுடன்தான் இன்று பள்ளிக்கு வருவா். அவா்கள் பசி மயக்கத்தில் எதைக் கற்றுக் கொள்வா்?

இது ஒரு தலைமுறையின் சோகம். தமிழக அரசு அசையா உறுதியுடன், வருங்காலத் தலைமுறையைக் காக்கும் என்று நம்புவோம்.


கட்டுரையாளா்:

வே. வசந்தி தேவி
முன்னாள் துணைவேந்தர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
30th August 2021