நடப்பு கல்வியாண்டிலிருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தமிழ் வழியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டப்படிப்புகள் துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.விவசாயம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், அதன் முடிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இவற்றை தமிழில்மொழி பெயர்த்து தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை பல ஆண்டுகளாக செய்து வருகிறது.நடப்பு கல்வியாண்டிலிருந்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகளை தமிழ் வழியில்கற்றுத் தருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வேளாண் பட்டப்படிப்பில் 40 இடங்களும், தோட்டக்கலைப் பட்டப்படிப்பில் 40 இடங்களும் தமிழ்வழியில் சேர்வதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.தமிழகத்தில், வேளாண் பல்கலை, அதன் உறுப்புக் கல்லுாரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலமாகவும் நடத்தப்படும் வேளாண்மை இளநிலைப்பட்டப்படிப்பை முடித்து, ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
வேலைவாய்ப்புத்துறை மூலமாக ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதைத் தவிர்த்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் ஆண்டுக்கு 200 பேர் வரை வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 50 பேர் வரை, உதவிப் பேராசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். மிகக்குறைவாக ஆண்டுக்கு 25 பேர் வரை, மத்திய அரசின் இடைநிலைப் பணிகளில் தேர்வெழுதி பணி வாய்ப்புப் பெறுகின்றனர்.எளிதில் வேலைவாய்ப்புதங்களுடைய தனித்திறன் மற்றும் முயற்சியால் ஆண்டுக்கு 10 வேளாண் பட்டதாரிகள், ஐ.ஏ.எஸ்., போன்ற குடிமைப்பணிகளிலும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தில் உயர் பணிகளிலும் தேர்ச்சி பெறுகின்றனர். தமிழ்வழியில் வேளாண் படிப்புப் படிக்கும் மாணவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்துத் தேர்வுகளிலும், 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறத்தகுதி பெறுவர். வேளாண் அலுவலர், குரூப் 1,2 3 மற்றும் 4 என அனைத்து நிலை அரசுப் பணிகளிலும் சேர்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கும். ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்கள் பணி அமர்த்தப்படுவதால், அவற்றில் 20 சதவீதம் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு பணி ஒதுக்கப்படும்.இதனால், ஆண்டுக்கு 40 மாணவர்கள் பட்டம் பெற்றால், அவர்களில் 20 பேர் வேளாண் அலுவலராகப் பணியில் சேர முடியும். இதில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் தமிழ்வழியில் கற்றோர்க்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும்.