Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 21, 2022

TET - தகுதி தேர்வு பதிவில் சிக்கல்!

இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில் விண்ணப்பிக்க முடியாமல், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தேர்வர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, மார்ச் 14ல், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் துவங்கியது.

ஏப்., 13 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்புகளில், குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில்,  இந்த தகுதி மதிப்பெண்ணில், இட ஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத விருப்பம் உள்ள பட்டதாரிகள், விண்ணப்ப பதிவுக்கு முயற்சித்து வருகின்றனர்.

இணையதள விண்ணப்ப பதிவு பக்கத்தில், 5 சதவீத மதிப்பெண் சலுகை விபரத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடாததால், சலுகையை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த தொழில்நுட்ப பிரச்னையை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment