Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 11, 2022

16.11.2012 முன்பு வரை TET கட்டாயம் என்பதே எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை: அரசின் கருணைக்கு காத்துள்ள ஆசிரியர்கள்


மதிப்புமிகு தமிழக அரசு ஆளுமைகளே! இருபால் பட்டதாரி ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்...
அரசாணை நிலை எண் 181 நாள்:15.11.2011 வாயிலாக முதன் முதலில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது.
முன்னதாக செப்டம்பர் 2011 இல் பணி நியமனம் எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கப்பட்டது.
இதற்கு பிறகு டிசம்பர் 2011 இல் பணி நியமனம் நடைபெற்றது. அதில் நியமனம் பெற்றவர்களின் நியமன ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு 04/2012 நாள்:07.03.2012 வாயிலாக TET தேர்வு முதன் முதலில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் 23.08.2010 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் TET தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டது. இதன் பின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் 19850/சி5/இ2/2014 நாள்:01.10.2014 இன் படி மேற்கண்ட ஆணையை பின்பற்றி, அரசாணை 181 இக்கு பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்த ஆணையை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டது.
இதன் பின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் 19850/சி5/இ2/2014 நாள்:08.11.2017 இன் படி , 23.08.2010 க்கு
முன்பு நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பின் நியமனம் பெற்றவர்கள் TET தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டது.(இந்த ஆணை TRB அறிவிப்பு 28.05.2012 ஐ அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டது).
மேற்கண்ட அறிவிப்புக்கு பின் அரசு பள்ளிகளில் நியமனங்கள் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது செப்டம்பர் 2011 மற்றும் நவம்பர் 2012க்கும (16.11.2012) இடைப்பட்ட காலத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதுமட்டுமின்றி 16/11/2012 அன்று தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலமாக ஒரு செயல்முறைகள் வந்தது. அதன்படி இனி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு TET அவசியம் என்ற சுற்றறிக்கை பெறப்படுகிறது. அதற்கு முன்பு வரை RTE act அடிப்படையிலான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவினை எந்தவொரு AIDED பள்ளி செயலர்களுக்கும் கொடுக்கப் படாமையாலும், அனுமதி அளித்த உயர் அதிகாரிகளுக்கே இந்த RTE பற்றிய முழுமையான புரிதல் இல்லாமையாலும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதுபோன்ற பல்வேறு சிக்கலான சூழலில் தான் ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் சூழல் நிலவி வருகிறது.


மேலும்,மத்திய அரசு பள்ளிகளில் கூட 06.03.2012 இக்கு பிறகு நியமனம் பெற மத்திய அரசின் தகுதி தேர்வு அவசியம்(CTET) என்ற நிலையே உள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்திய அரசாணைகளின் படியே 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளோம். 16/11/2012 க்கு முன்பு வரை எங்களுக்கும் TET கட்டாயம் என்பதே முறையாக தெரியப்படுத்தவில்லை.




சுமார் 11 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100% தேர்ச்சி விழுக்காடு வழங்கி வரும் நமது ஆசிரியர்களை (இதில் சில ஆசிரியர்கள் தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது) குறைத்து மதிப்பிடும் வகையில் விமர்சனங்கள் வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஆகவே இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்களது சிறப்பை பலவகையிலும் நிரூபித்துள்ள நம் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு அவசியம் தானா? என்பதையும் கனிவுடன் பரிசீலித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான ஆணையை வெளியீட்டு ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது


பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குடும்பங்கள் சார்பாக... திருப்பூர் ஞா. நீலா. ( பட்டதாரி ஆசிரியர் )

No comments:

Post a Comment