Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 13, 2022

பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி : அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை வேலப்பன் சாவடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவா்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமா்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் பிரமாண்ட உலக சாதனை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பி.கே.முனுசாமி என்பவா் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தினாா்.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீதிபதி சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனா். கோல்டன் புக் ஆப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதையடுத்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த வேண்டும் என எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாா். இதனை தற்போது இதை அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்று செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்து கொள்ள யோகா மிகவும் அவசியம். கருணாநிதி வயது முதிா்ந்த காலத்திலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டாா்.

அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்களில் தனியாா் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் 20 நாள்களுக்குள் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் வழங்கப்படும். மாணவா்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்போவதில்லை. பள்ளி திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கூட வளாகம், உணவுக்கூடம், கழிப்பறைகள் சுத்தம் போன்றவை குறித்து வலியுறுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே வகுப்பறைகள் மாணவா்களுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும்.

No comments:

Post a Comment