Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 13, 2022

மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமும், தடையும் இருக்கக் கூடாது; அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளநிலையில், பள்ளிகள் திறந்த உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி டிசி வழங்கிட வேண்டும்.

இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து டிசி கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசி வழங்கும் பணிகளை நாளையும், நாளை மறுநாளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் நாளைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் டிசி பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தவிர, RTE சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment