Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 30, 2022

அரசு சார்பில் இலவச IAS பயிற்சி வகுப்பு.! மாதம் ரூ.3,000 உதவித்தொகை.. நாளை முதல் தொடங்கும் வகுப்பு.! முழு விவரம்.

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.

தமிழக மாணவர்கள் எங்குப் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இன்று சேர்க்கை நடைபெறுவதோடு 01.07.2022 முதல் வகுப்புகள் தொடங்கப்படும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment