Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 30, 2022

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை - செப்.5-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்


அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார்.

தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில், இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகி்ன்றனர்.

இத்திட்டத்துக்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதந்தோறும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் இத்திட்டத்தின் கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பயன்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு ‘புதுமைப் பெண்’ திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது டெல்லியில் உள்ளதை போல, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 மாதிரிப் பள்ளிகளை அவர் திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment