Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 30, 2022

தமிழக கே.வி. பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை

மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதுமிருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.

பாதுகாப்புத்துறை, துணை ராணுவத்தினர் உள்பட மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இவற்றில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லை என்கிறது தகவல்கள்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஆசிரியர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது. ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயாக்களில் 12,044 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்தான் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அடுத்த இடத்தில் 1066 காலிப் பணியிடங்களுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,199 பள்ளிகள் உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 49 பள்ளிகள் இயங்குகின்றன.

அதிகளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாக தலைமை ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இரண்டு பணி நேரங்களிலும் வேலை செய்யவைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மொத்தமுள்ள 1,247 பள்ளிகளில் 250 பள்ளிகள் இரண்டாம் தர பள்ளிகள். இவற்றுக்கு தலைமை ஆசிரியர்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக துணை தலைமையாசிரியர் செயல்படுவார். மிச்சமுள்ள 1000 பள்ளிகளில் 450 பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் இல்லை என்கிறது புள்ளிவிவரம்.

கடைசியாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி கடந்த 2019ஆம் ஆண்டுதான் நடந்துள்ளது. அதன்பிறகு நடத்தப்படவில்லை. இப்பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறை பல்வேறு நிலைகளைக் கொண்டதாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறனறிவுத் தேர்வுகளை உள்ளடக்கியதாம். இந்த கல்வியாண்டுக்குள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

புது தில்லி போன்ற பகுதிகளில் அதிக மத்திய அரசுப் பணியாளர்கள் இருப்பதால், அதுபோன்ற இடங்களில் பள்ளிகள் இரண்டு ஷிஃப்ட் முறையில் நடைபெறும். அதுபோல சுமார் 70 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு துணை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தமாக தலா இரண்டு பிரிவினர் பணியாற்ற வேண்டும். ஆனால் பற்றாக்குறை காரணமாக இரண்டு பணி நேரத்துக்கும் ஒரே ஆசிரியர்களும் துணை தலைமையாசிரியர்களும் பணியாற்ற வைக்கப்படும் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment