Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 29, 2022

தமிழகம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகள்: பணிகளை முடுக்கி விடும் பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருபுறம் அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுதல், தேவையான கட்டிடங்களை புனரமைத்தல், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. மறுபுறம் கரோனா பாதிப்பால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும், எழுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் டெல்லியில் இருப்பதைப் போன்ற தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் அமைப்பதிலும் பள்ளிக் கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தகைய பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதிநவீன வகுப்பறை: அதன்படி, அரசின் துரித முயற்சியால் தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடங்கிவைத்தார். அதன்படி மாநிலத்தில் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.169 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. தகைசால் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியர் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் சொல்லித் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

28 தகைசால் பள்ளிகள் அமைக்க28 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோலவே பிற பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட இருக்கின்றன.

ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6 கோடி: இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால்பள்ளிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கான பூர்வாங்கப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. தகைசால் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தப் போகும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களிடம் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். தகைசால் பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசின் முன்னோடித் திட்டமான தகைசால் பள்ளிகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கல்விகற்கும் சூழல் ஏழை மாணவர்களுக்கு கிடைக்கப் போவது வரப்பிரசாதம். இதுபோலவே மாதிரி பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட உள்ளது. தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment