Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 9, 2022

தேசிய அளவில் நடந்த நீட் தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி

மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியானது.

தமிழகத்தில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வில் மாணவ-மாணவியர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், ஒன்றிய கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலுடன் கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2022ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்க மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்காக நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதுதவிர இந்தியாவுக்கு வெளியில் 14 நகரங்களிலும் இந்த தேர்வு நடந்தது. பதிவு செய்த மாணவ மாணவியரில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடந்தது. ஆங்கில வழியில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 24 பேரும், தமிழ் வழியில் 31 ஆயிரத்து 965 பேரும், இந்தியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 827 பேரும் எழுதினர்.

மற்றவர்கள் பிற மொழியில் எழுதினர். தேர்வு எழுதியோரில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியோரில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 2022ம் ஆண்டின் நீட் தேர்வில் ஓபிசி பிரிவினர் 4,47,753, எஸ்சி பிரிவில் 1,31,767, எஸ்டி பிரிவில் 47,295, பொதுப் பிரிவில் 2,82,184, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் 84,070 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 2717 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 15 லட்சத்து 44 ஆயிரத்து 275 பேர் பங்கேற்று 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த 2022ம் ஆண்டில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வு எழுதி, 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் மதுரை மாணவன் முதல் இடம்

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மதுரை மாணவனை பல்வேறு அமைப்பினரும் பாராட்டினர். மருத்துவ படிப்புக்கென தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை நேற்றுமுன்தினம் இரவு வெளியிட்டது. அதில் மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா, அகில இந்திய தர வரிசையில் 30வது இடத்தையும், தமிழக அளவில் முதல் மதிப்பெண்ணையும் பெற்று வென்றுள்ளார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவன் த்ரிதேவ் விநாயகா நிருபர்களிடம் கூறும்போது, ''தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. அதுவும் தவிர, கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்களை வளர்த்தும், கருத்தரங்குகளில் பங்கேற்றும் தயார்ப்படுத்திக் கொண்டேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நான் இந்த நிலையை எட்ட முடிந்திருக்கிறது'' என்றார்.

No comments:

Post a Comment