Tuesday, September 6, 2022

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடும் எதிர்பார்ப்புகளும் - அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடக்கக்கல்வி நிலையில் தமிழ்வழிக் கல்வி மலருமா?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


அண்மையில் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது நல்ல பயனுள்ள முன்னெடுப்பாகும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனும் உயர்கல்வித் துறையின் ஆணை குறிப்பிடத்தக்கது. 

அதுபோல், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 வகுப்புகள் முடிய பயின்றோர் IIT, IIM, IISC, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் முதல்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளதும் அறியத்தக்கது.

தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தைச் செயல்படுத்த, பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும். மேற்படி உயர்கல்விக்கு அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் தகுதியானவர்களின் விவரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன. ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்கில் இந்த உதவித்தொகை செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை போன்ற சலுகைகளை வாரி வழங்கி இருப்பது எண்ணத்தக்கது.

எனினும், காலம்காலமாக நடுத்தர பெற்றோரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம் படிப்படியாகக் கல்வியினைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக் பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக் கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனலாம்.

இதுதவிர, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நடத்தும் கேந்திர வித்யாலய பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பாததும் சிபிஎஸ்சி பள்ளிகள் பலவற்றைத் திறக்க அனுமதி அளித்துள்ளதும் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போலாகும். அதேசமயம், பத்து மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளை மூடும் அவலமும் ஒருபுறம் கடந்த காலங்களில் நடந்துள்ளது. தமிழ்வழிக் கல்விக்கு இதுநாள்வரை இப்படியொரு நெருக்கடி நேர்ந்தது கிடையாது. இதுகுறித்து போதிய அக்கறையும் விழிப்புணர்வும் சம்மந்தப்பட்டவர்களிடம் இன்னும் எழாதது வியப்பிற்குரியது. குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் தமிழ்வழிக் கல்விக்கு நிரந்தரப் பூட்டுப்போடக் கருதும் ஒன்றிய, மாநில அரசுகளின் நோக்கும் போக்கும் பற்றிய அபாய அச்ச உணர்வுகள் துளிக்கூட இருப்பதாகத் தெரியவில்லை .

முன்பெல்லாம் இவர்களின் குழந்தைகள் கல்விக்கற்கும் புகலிடங்களாக அரசுப் பள்ளிக்கூடங்கள் திகழ்ந்தன. உயர் பதவிகளில் இருந்தோரின் பிள்ளைகள்கூட விரும்பி இங்குதான் அரிச்சுவடி படிக்க ஆயத்தமாயினர். இதனால் அரசுப் பள்ளிகளில் வழங்கி வந்த தமிழ்வழிக் கல்வி ஊரெங்கும் கோலோச்சிக் கிடந்தது. பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகளில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் அத்தகையோரிடம் ஊடாடிய பெரும் தனவந்தர்களின் பிள்ளைகளும் மட்டுமே சொற்பமாகக் கல்வி பயின்று வந்தனர். இத்தகு சூழலில் விடுதலைக்குப் பிந்தைய திராவிட அரசியல் கலை பண்பாட்டு எழுச்சியானது பார்ப்பனிய, இந்தித் திணிப்பை முழுமூச்சாக எதிர்த்து அழித்தொழிக்க, மாற்றாக ஆங்கிலத்தை முன்வைத்ததன் விளைவே தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளின் பெருமளவிலான வெடிப்பிற்கு முக்கியக் காரணமாகும் எனலாம்.

இருமொழிக் கொள்கையினை வலியுறுத்தி ஆங்கிலவழிக் கல்விக்கு உரமூட்டிய நேரத்தில் இங்கிருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் உரத்த முழக்கத்தைச் செயலளவில் நடைமுறைப்படுத்தியிருந்தால் செம்மொழியாம் தமிழ்மொழி அரசுமொழியாக, ஆட்சிமொழியாக, வழிபாட்டு மொழியாக, பாட பயிற்று மொழியாக என் அனைத்துத் துறைகளிலும் வளங்கொழித்திருக்கும் என்பது திண்ணம். இப்போதும் ஆட்சியாளர்களுக்குக் காலம் கடந்துவிடவில்லை என்றே தோன்றுகின்றது. ஒருதுளி மையில் இதுநாள்வரை எத்தனையோ சட்டங்களை மக்கள் நலன் கருதித் திருத்தப்பட்டிருக்கின்றன; மாற்றங்கள் செய்திருக்கின்றன. ஒருமுறை தமிழ்மொழியைக் காக்க தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி எட்டாம் வகுப்பு வரையாவது கட்டாயம் என்று ஆணை பிறப்பிக்க முயற்சித்தல் என்பது வீண் செயலல்ல.

மொழியென்பது வெறும் தகவல்தொடர்பிற்கான கருவியன்று. இனத்தின் மேன்மைக்கும் நீடித்த பெருமைக்கும் உரிய உயரிய உயிர்ப்புள்ள நாடித் துடிப்பாகும். ஓர் இனத்தின் அழிவென்பது முதலில் மொழியின் அழிவிலிருந்தே தொடங்குகிறது என்பது உலகளவில் நிரூபணமான பேருண்மையாகும். அதேவேளையில், மொழி அழித்தொழிப்பு என்பது இன அழித்தொழிப்பினால் மட்டும் நிகழாது. பேரளவில் நிகழ்த்தப்படும் தாய்மொழிவழியின் மீதான பொதுமக்கள் புறக்கணிப்புகூட மொழி அழிவிற்கும் சிதைவிற்கும் வழிகோலும். இதன் தொடக்கப் புள்ளியாக தொடக்கக் கல்விப் பாட பயிற்றுவழி உள்ளது.

வளமான, வலிமை மிகுந்த, ஒளி படைத்த, இளைய பாரதத்தினை உருவாக்கம் செய்வதில் தாய்மொழிவழிக் கல்வியிலான 6-14 வயதினருக்குரிய எட்டாண்டுத் தொடக்கக் கல்வியானது மிகவும் இன்றியமையாதது. அக்கால கட்ட கல்வியறிவு சிந்திக்கும் ஆற்றல், படைப்பாற்றல் திறன் ஆகியவற்றால் இளம் குடிமகன்(ள்)கள் அனைத்துத் துறைகளிலும் எல்லாவகையிலும் மேம்பட இதுவே அடிப்படை. அக்கல்வியானது அவரவர் தாய்மொழியிலேயே அளிக்கப்பட வேண்டுமென்பது பல்வேறு தலைசிறந்த கல்வியாளர்களின் தலையாய கோரிக்கையாகும். அதனைப் புறந்தள்ளியதன் மூலம் குடும்ப வழக்கின்மை, சரியான பள்ளிச்சூழலின்மை, அந்நியப் பண்பு ஆகியவற்றால் ஆங்கிலத் திணிப்பைச் சகித்துக்கொண்ட சிறார்கள் சவலைப் பிள்ளைகளாக, சுயமற்றவர்களாக, நகல்பிரதிகளாக சமுதாயத்தில் காணக் கிடைக்கின்றனர். சுருங்கச் சொன்னால், இத்தகையோர் தமிழிலும் புலமையின்றி ஆங்கிலத்திலும் போதிய திறனின்றி திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அதுபோல் வாழும் ஒரு துர்பாக்கியப் போக்குதான் இங்கு நிலவுகிறது. மேலும், அன்று எட்டாம் வகுப்பு மட்டும் படித்தோரிடையே காணப்பட்ட இருமொழிப் புலமைப் பண்பை இன்று முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடம் ஏனோ காண முடியவில்லை. இதுதான் நடப்பு உண்மையாகும். இந்நிலை நீடிக்குமேயானால், தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள் போன்றவற்றைச் சிறப்பாகப் படைத்தளிக்க நல்ல ஆள் கிடைப்பது அரிதாகிவிடும்.

அதுபோல், ஆங்கில வழியில் கல்வி பயில்வோர் உயர்ந்தோர் தமிழ் வழியில் பாடம்படிப்போர் தாழ்ந்தோர் என்கிற நவீனத் தீண்டாமைப் போக்குகளால் தமிழ்ச் சமூகம் மேலும் பிளவுபட இதனால் வாய்ப்புண்டு. ஏற்கெனவே முடமாகிக் கிடக்கும் தமிழ்வழிக் கல்வியினை ஒட்டுமொத்தமாக முடக்கிடும் முகமாக அண்மையில் மாநில அரசால் அரசுத் தொடக்கப் பள்ளிகள் முதற்கொண்டு மேனிலைக் கல்வி வரை ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் மும்முரமாகத் தொடங்கிச் செயல்படுத்தப்பட்டு வருவதென்பது மிகவும் கவலையளிக்கக்கூடியதாகும். இதைப் பெற்றோரது விருப்பத்திற்கிணங்க நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் தீமையினை எடுத்துச்சொல்லி விளக்குதலும் விளங்கவைத்தலும் அதன் தொலைநோக்குப் பார்வையென்பது மறுப்பதற்கில்லை. மாறாக, மெட்ரிக் பள்ளிகளை முறைப்படுத்துதல், அனுமதி வழங்காதிருத்தல், அரசுப்பள்ளிகளின் தரத்தைக்கூட்ட புதிய கட்டமைப்புகள் மற்றும் வளங்களை ஏற்படுத்தித் தருதல் போன்றவை மட்டும் போதாது. தமிழ்வழிக் கல்விப் பயிற்றுமுறையினைப் பெருமளவு ஊக்குவித்தலும் நர்சரி முதற்கொண்டு உயர் தொழில்நுட்பக் கல்விவரை தமிழ்ப்பாடத்தை ஒரு பாடமாகவாவது பிழையின்றிப் பயில தக்க வழிவகுத்தலும் அவசர அவசியமாகும்.

பெற்றோரிடையே படிந்துவிட்ட ஆங்கிலக்கல்வி மோகம் தணிக்கப்படுதலும் தவிர்க்கப்படுதலும் அரசு, பெற்றோர், சமுதாயத்தினரின் ஒருமித்த முயற்சியால் நிகழுதல் நல்லது. தாய்ப்பாலையொத்தது தாய்மொழிவழிக்கல்வி என்பதை உணருதல் பெற்றோர் கடனாகும். தமிழைப் பேசி தமிழர்களாய் வாழும் தன்னிகரற்ற தமிழ்நாட்டில் எந்தவொரு நிலையிலும் தமிழ்மொழிப்பாடம் அன்றி பிற பாடங்களில் தமிழைப் படிக்காமல் முனைவர் பட்டம் முடிய படித்திடும் அபத்தநிலை மிகவும் ஆபத்தானது. ஆங்கிலம் என்பது உலகளவிலான ஒரு தகவல்தொடர்பு மொழி அவ்வளவே. ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் முதலான வல்லரசு நாடுகளின் வகுப்பறைகளில் ஆங்கிலப் பாடமோ, தேர்வோ இல்லை. அவரவர் தாய்மொழிதான் அங்கு முதன்மையானதாக உள்ளது. உலக அரங்கில் அவர்கள் ஆங்கிலமின்றி வெற்றிக்கொடி நாட்டுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் தொடக்கக் கல்வி முடிய பயிற்றுமொழியாக அவரவர் தாய்மொழியே உள்ளது.

ஆதலால்தான், அவர்களால் மத்திய அரசின் ஐஐடி, ஐபிஎம் உள்ளிட்ட உயர்தொழில் நுட்பத்துறையில் தேசிய அளவில் அதிகப் பங்களிப்பைத் தரமுடிகின்றது. ஏனெனில், தாய்மொழியில் நல்ல தேர்ச்சியும் புலமையும் மிக்க ஒருவரால் மட்டும்தான் பிற மொழிகளிலும் எளிதாக வெற்றிபெற முடியும். அதுபோல், ஒருவருக்குக் கலை, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட புத்தாக்கப் படைப்புகள் பற்றிய நூல்கள் மற்றும் கலைக்களஞ்சியம் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து உடனுக்குடன் தமிழில் மொழியாக்கம் பெற்று எளிதாகக் கிடைக்கச் செய்தல் சாலச்சிறந்தது. இவ் அரும்பணியைச் செவ்வனே செய்திட திரளாக மொழியியல் வல்லுநர்கள் உருவாதலுக்கும் உருவாக்குதலுக்கும் அரசு போதுமான ஆக்கமும் ஊக்கமும் வழங்கிடுதல் மிகுந்த நன்மை பயக்கும். அப்போதுதான் தமிழ்ச் சமூகத்தின் மனநிலையில் தமிழ்மொழியில் இல்லாதது உலகில் எதுவுமில்லை என்கிற நிலை உருவாகி தாய்மொழி மீதான மதிப்பு மேலும் கூடும்.

அதுபோல் கடந்த தலைமுறைவரை வாசிப்புப் பழக்கம் என்பது உயர்ந்த, நடுத்தர வர்க்கத்துப் படித்தோரின் குடும்பவழக்கமாக இருந்தது முற்றிலும் உண்மையாகும். தற்போது மலிந்து வெகுமக்கள் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் தொடர் அலைவரிசைகளும் நவீன செல்பேசிகளும் அதிகம் புழங்காத அக்காலக்கட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட வார, மாத இதழ்கள் மக்களிடையே கோலோச்சிக் கிடந்தன. குறிப்பாக, இளைய தலைமுறையினர் பதின்பருவ உளச்சிக்கல்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கெடுத்துக் கொள்ளாமல் அவற்றிற்கு வடிகாலாக புத்தகங்களைத் தேடி வாங்குவதும் அவை வெளியாகும் நாளுக்காகத் தவம் கிடப்பதும் மட்டுமல்லாமல் தொடர் வாசிப்பை அரும்பெரும் நன்னடத்தையாகக் கொண்டு தம்மைத்தாமே நல்வழிப்படுத்திக் கொண்டனர். அவ்வாசிப்புப் பழக்கம் பெருவாரியான பெண்களிடம் கோலோச்சிக் கிடந்தது.

அறியாமையில் உழலும் மக்களை விழிப்படையச் செய்து அவர்களின் அறிவுப்பசியைப் போக்குவது ஒன்றையே தம் தலையாயக் குறிக்கோளாக எண்ணி அச்சு ஊடகங்கள் அறத்தோடு செயல்பட்டன. இன்று நிலைமை தலைகீழ்! நவீனத்திற்குப் பிந்தைய இக்காலக்கட்டத்தில் தன்னலம் குறுகிய குழுமனப்பான்மை, வெற்றுப்புகழ்ச்சி, முழு பொழுதுபோக்கு, வியாபார நோக்கு போன்றவை மிகுந்து ஊடகமும் ஒரு பெருவணிகக் குழுமமாக மாறிவிட்டதுதான் சாபக்கேடு. திரைத்துறை சார்ந்த செய்திகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பெருவாரியாக முக்கியத்துவம் தந்து வணிக இதழ்கள் தம் நீடித்த நிலைப்பைப் பல்வேறு சமரசங்களுக்கிடையில் தொழில் தர்மத்தை ஓரளவு கடைப்பிடித்து வந்தாலும் பாரம்பரியமிக்க ஊடகங்கள் சில நெறிபிறழாமல் அத்தொழில் தர்மத்தைக் கட்டிக்காத்து வருவதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

அதேசமயம், இலக்கியத்தைப் போற்றி வளர்ப்பதாகப் பரப்புரை செய்துகொள்ளும் சிற்றிதழ் உலகத்தின் போக்குகள் மிகவும் விசித்திரமானவை. வீண் தற்புகழ்ச்சிக்கும் தனிநபர் தாக்குதல் வழக்கத்தை பேரளவு ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்கும் பொன்னான நேரத்தை மட்டுமல்லாமல் மதிப்புமிக்க பக்கங்களையும் வெறுமனே வீணடித்து வருவது கண்கூடு. தவிர, அவற்றிற்கிடையே காணப்படும் இனக்குழு அரசியலால் ஆக்கப்பூர்வமான மாற்றுக் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் வழிவிடாமல் இரும்புத்திரை போர்த்தி அந்நியப்பட்டு நின்று அரற்றுவதையும் பெருந்திரளான வாசகர் கூட்டத்தைப் பார்த்துத் தூற்றுவதையும் இவை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. சுருங்கச் சொன்னால், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் காணப்படும் நிலையக் கலைஞர்கள்போல் அண்மைக்காலமாக இருவேறு ஊடகங்களிலும் நிலைய இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமே அவற்றை ஆக்கிரமித்துக்கொண்டு புதுவரவுகளுக்கு முட்டுக்கட்டையாக விளங்குவதுகூட வாசக மனநிலையில் ஒருவித சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகின்றன.

இத்தகு, நோக்கும் போக்கும் ஓர் அறிமுக வாசகனை வாசிப்பிலிருந்து விலக்கிக் கவனத்தைச் சிதறடித்து வந்தாரையெல்லாம் வரவேற்று வாழவைக்கும் மேம்பட்ட தொழிட்நுட்பம் கொண்ட கருத்துக்கும் காட்சிக்கும் பெருவிருந்து படைக்கும் இணைய தளங்களின்மீது தீரா மோகத்தை அவனுக்குள் மூட்டிவிடுவது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகளாவிய அளவில் உடனடியாகக் கிடைக்கப்பெறும் புதுநட்பும் அதனைப் பேணும் அரட்டைக் கச்சேரிகளும் அவ்வாசகனுக்குப் பெரும் ஊக்கமளிக்கின்றன. தொடர்கதைகள் பலவற்றில் மனத்தைப் பறிகொடுத்து அவற்றின் செவ்வியல் தன்மைகள், ஒழுக்கச் சீல குணங்கள், உயரிய வாழ்வியல் விழுமியப் பண்புகள் நிறைந்த கற்பனைக் கதைமாந்தர்கள்மேல் அளப்பறிய பற்று கொண்டிருந்த பெண்ணினத்தை இன்று நெடுந்தொடர்கள் பைத்தியமாக ஆட்டிப்படைக்கின்றன என்பது மிகையாகாது.

தனிக் குடும்ப நெறி, தன்முனைப்பு தற்சார்பின்மை போன்றவை தவறாகச் சித்திரிக்கப்பட்டதன் விளைவும் தனிமனித நுகர்வுக் கலாச்சாரப் பண்பும் வாசிப்பைச் சுமையாக்கிவிட்டன. இயந்திர மயமாகிப் போன மனித வாழ்க்கையில் நல்ல நூல்களை வாங்கியோ அல்லது அருகிலுள்ள நூலகங்களுக்குச் சென்றோ வாசிப்பதைத் தவிர மனிதர்களுக்கு ஏனைய எல்லாவற்றிற்கும் போதிய நேரமிருக்கின்றது. ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நல்ல நூல்களும் வாசிப்பும் மனித வாழ்வை மேம்படுத்த வல்லவை. மானுடத்தைப் போதிப்பவை. வளரச் செய்பவை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கிய நடுத்தர வர்க்கம் எதிர்வர உள்ள தமிழ்மொழி மீதான சிக்கல்களை நன்குணர்ந்து தத்தம் பிள்ளைகளை மீளவும் அதே உற்சாகத்துடன் கடைச்சரக்காகிப் போய்விட்ட அந்நிய மொழிவழிக் கல்வியை விடுத்து தமிழ்மொழிக் கோலோச்சும் அரசுப்பள்ளிகளில் சேர்த்துப் பயிலச் செய்யவேண்டும். அப்போதுதான், திசைமாறி பயணித்த இவ்வர்க்கத்தைப் பின்பற்றி தாமும் பயணப்பட துணிந்து அல்லலுறும் கிராமப்புற, அடித்தட்டு மக்களின் மனநிலை மாறி தமிழ்வழிக் கல்வி புத்தெழுச்சி பெறும்.

தவிர, ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்கான செலவுகளை வீணென்று நினைக்காமல் வருங்காலத்திற்கான நல்ல முதலீடு என்பதை உணருதல் நல்லது. அதுபோல், கல்விக்காகப் பிடித்தம் செய்யப்படும் வரிகள் அனைத்தையும் முழுவதும் கல்விக்கே செலவழித்தால் அந்தச் சுமையும் காணாமல் போய்விடும். கல்வியில் தனியார்மயம் என்பது உணவில் கலப்படத்தைக் கலத்தல் போன்றது. மேலும், அனைவருக்குமான கல்வி இதனால் எட்டாக் கனியாகிவிடும். தாய்மொழி வழிக்கல்வி கற்பதென்பதும் தமிழ்மொழி வாசிப்பை நேசிப்பதென்பதும் தமிழரின் அடிப்படைப் பிறப்புரிமையாகும். கடமையும்கூட. இதை மறுத்தலாகாது. ஆங்கில அந்நிய மொழியானது பகட்டுமிக்க பட்டாடையாகக் காட்சியளிக்கலாம். தாய்மொழியாம் தமிழ்மொழியே தமிழனின் உயிர்மூச்சாகும்.

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் கூட தொடக்கக்கல்வி முழுவதும் தாய்மொழிவழிக் கல்வி கட்டாயம் என்று நடைமுறைபடுத்தி இருப்பது நோக்கத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நன்னாள் ஆகியவற்றை நடப்பு செப்டம்பர் மாதத்தில் திராவிட மாதம் என்று அறிவித்து திராவிட முன்மாதிரி நல்லரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான விடியல் ஆட்சியானது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள 1 முதல் 8 ஆம் வகுப்பு முடிய கட்டாயம் தமிழ்வழிக் கல்வியைத் தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவரச அவசியமாகும்.

எதிர்வரும் செப்டம்பர் 10 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது பல்வேறு கல்வியாளர்களின் கருத்தாகும். தமிழகத்தின் அனைத்து வகையான பள்ளிகளிலும் கட்டாய தமிழ்வழிக் கல்வி தொடக்கக்கல்வி நிலையிலாவது அரியணை ஏறுமா?

எழுத்தாளர் மணி கணேசன் 7010303298

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top