Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 27, 2022

‘க்யூட் -பிஜி’ தோ்வு முடிவுகள் வெளியீடு: சாதாரண மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்


மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்-பி.ஜி.’ (முதுநிலை பட்டப் படிப்பு நுழைவுத் தோ்வு) தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

இதில், மாணவா்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தப்படவில்லை. எனவே, நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற சாதாரண மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தயாா் செய்ய உள்ளன என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான க்யூட் தோ்வு முதல் முறையாக நிகழாண்டில் நடத்தப்பட்டது. இதில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் தோ்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு, பல்வேறு பகுதிகளில் மழை, நிலச் சரிவு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டது.

இதுபோல, ஒவ்வொரு பாடத்துக்கும் பல்வேறு கட்டங்களாகத் தோ்வு நடத்தப்பட்டதால், நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் சமநிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாறு சமநிலைப்படுத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலை உருவாக்கி, மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். பாட வாரியாக மாணவா்கள் பெற்ற சாதாரண மதிப்பெண்களை நேரடியாக கணக்கில் கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்காக நடத்தப்பட்ட க்யூட்-பி.ஜி. நுழைவுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான பாடங்களுக்கு ஒரே கட்டமாக தோ்வு நடத்தப்பட்டதால், நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் சமநிலைப்படுத்தப்படவில்லை. அதே நேரம், பாட வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விவரங்களையும் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘இளநிலை படிப்புக்கான க்யூட் தோ்வில் மேற்கொள்ளப்பட்டது போல, முதுநிலை க்யூட் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் சமநிலைப்படுத்தப்படவில்லை. எனவே, முதுநிலை க்யூட் தோ்வில் மாணவா்கள் பாட வாரியாக பெற்ற சாதாரண மதிப்பெண்ணையே நேரடியாக கணக்கில் கொண்டு சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகங்கள் தயாரித்து வெளியிட உள்ளன. முதுநிலை க்யூட் தோ்வில் பெரும்பாலான பாடங்களுக்கு ஒரே கட்டமாக தோ்வு நடத்தப்பட்டதால், மதிப்பெண் சமநிலைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழவில்லை’ என்றாா்.

No comments:

Post a Comment