நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, September 6, 2022

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்ததில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது. கடந்த மாதம் தொடங்க வேண்டிய பொறியியல் கவுன்சிலிங் நீட் தேர்வு முடிவினால் ஒத்தி வைக்கப்பட்டது. எப்போது நீட் தேர்வு முடிவு வெளிவரும் என்று மாணவ-மாணவிகள் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை (7-ந்தேதி) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நாளை பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ந் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 'நீட்' தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad