Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 12, 2022

எதிர்பார்த்தது நடக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ...அதிருப்தி!

பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால், முதல்வர் பங்கேற்ற, 'ஜாக்டோ -- ஜியோ' மாநாடு படுதோல்வி அடைந்துள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், சென்னையில் நேற்று முன்தினம் மாநாடு நடத்தப்பட்டது.இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், 60 வயது வரை பணியாற்றலாம்.'தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு என, தனி இயக்குனரகம் செயல்படும். நிதி நிலை சரியானதும் மற்ற அறிவிப்புகள் வரும்' என்றார்.
ஆனால், எதிர்பார்த்த அறிவிப்புகள் வராததால், மாநாட்டில் முதல்வர் பேசும்போதே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.

விடியல்

ஜாக்டோ - ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு, வாழ்வாதார நம்பிக்கையை இழக்க வைத்து, படுதோல்வி அடைந்து விட்டதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்:
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடியல் தருவோம் என்று கூறி விட்டு, மேலும் இருளில் தவிக்க விட்டு விட்டனர்.இந்த ஆட்சி வந்த 16 மாதங்களில், பல முறை மனு அளித்தோம். பணி நிரந்தரம் என்ற செய்தியை முதல்வர் அறிவிக்காமல் ஏமாற்றி விட்டார்.
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் ஜேசுராஜா:
11 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறோம். 'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பணி நிரந்தரத்துக்கான எந்த நடவடிக்கையையும், முதல்வர் ஸ்டாலின் எடுக்கவில்லை; மாநாட்டிலும் அறிவிக்கவில்லை. ஜாக்டோ - ஜியோ மாநாடு ஏமாற்றம் அளிக்கிறது.
கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார்:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்து, முதல்வர் அறிவிக்கவில்லை.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்ட கோரிக்கை குறித்து, நம்பிக்கையான அறிவிப்பு வெளியாகவில்லை.இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பது குறித்தும் பேசவில்லை. இந்த மாநாடு ஏமாற்று வித்தையாகி விட்டது.
நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுச்செயலர் மாரிமுத்து:
அரசு ஊழியர்களிடம், புதிய 'பென்ஷன்' திட்டத்தின்படி பிடித்தம் செய்த தொகையும், ஊழியர்களுக்கு அரசு பங்களிக்க வேண்டிய தொகையும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.

ஏமாற்றம்

இதை முறைப்படுத்தி, பழைய பென்ஷன் திட்டத்தை, முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில், மாநாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூடினர். ஆனால், அவரது உரை மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.வாழ்வாதார நம்பிக்கையுடன் வந்தவர்கள், ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் திரும்பிச் சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாநாட்டு மேடையில் சங்க நிர்வாகிகள் சிலர், ஆளுங்கட்சியை புகழ்ந்தும், முந்தைய முதல்வர்களை இகழ்ந்தும் அரசியல் பேசினர். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஊழியர்கள் நலனுக்கான மாநாடு என்று கூறி, அனைத்து அரசு ஊழியர் சங்கங்களிடம் நிதி திரட்டினர். ஆனால், நிர்வாகிகள் சிலர், தங்களின் சுயநலனுக்காக ஆளுங்கட்சியை துதி பாடியதும், மற்ற கட்சியினரை அவதுாறாக பேசியதும் அநாகரிகமானது.
ஆளுங்கட்சி மாநாடாக நடத்திய நிர்வாகிகள், திரட்டிய நிதியை திருப்பித் தர வேண்டும்' என்றனர்.மேலும், அரசு பணியாளர் நடத்தை விதிப்படி, அரசு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம். எனவே, சம்பந்தபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment