Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 21, 2022

ஒன்றிய அரசின் உத்தரவுபடி தமிழகத்தில் புதிய வாகன சட்டம் அமல் அபராத தொகை அதிரடி உயர்வு: ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000; செல்போன் பேசியபடி ஓட்டினால் ரூ.10000

ஒன்றிய அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் போக்குரவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளன.

பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால் ரூ.500, 2வது முறை மீறினால் ரூ.1500 அபராதம், செல்போன் பேசியபடி ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மோட்டார் வாகனச் சட்டம்-1988-ல் 2019ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு காவல்துறையினரும் அபராதங்கள் வசூலிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிக்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். எனவே, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரிவுகளைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழகம் முழுவதும் மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள். அதேநேரத்தில் போக்குவரத்து துறையின் செக் போஸ்ட்டுகளுக்கு இந்த அதிகாரத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மாநிலங்களில் பெருகியுள்ள வாகனங்களால் ஏற்படும் விபத்துகள், விதிமீறல்களை தவிர்க்க ஒன்றிய அரசின் மோட்டர் வாகனங்கள்(திருத்தம்) சட்டம் 2019( ஒன்றிய சட்டம் 32-2019) மேற்கொள்ளபட்ட திருத்தங்களின் அடிப்படையில் மோட்டர் வாகனச் சட்டம்-1988ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த சட்ட திருத்தங்களின்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரிக்கப்படுகிறது. இந்த திருத்தம் அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து தாக்கல் செய்த விரிவான அறிக்கையை தமிழக அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அவர் பரிந்துரை செய்த சட்டப்பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

குறிப்பாக ஒன்றிய அரசின் திருத்தச் சட்டம் 32-2019ன் துணைப் பிரிவு 211ஏ-ன் படி அபராதங்களை, கட்டணங்களை மின்னணு பரிமாற்ற முறையில் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 6-1-2020ம் தேதி எழுதிய கடிதத்தில்'' மோட்டார் வாகனச் சட்டம்-1988 அதாவது மோட்டா் வாகன திருத்தச் சட்டம்-2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்டமாகும். அதனால் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யவோ, ஒன்றிய அரசு பரிந்துரைத்ததை மீறி அபராதங்களை குறைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது. அப்படி செய்வதென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருந்தது. எனவே, போக்குவரத்து ஆணையரின் பரிந்துரைகள் பரிசீலனை செய்து திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன.

அதனடிப்படையில் தமிழகத்தில் செக் போஸ்ட்களை தவிர மற்ற இடங்களில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிக்கு குறையாத அலுவலர்கள் தமிழகம் முழுவதும், போக்குவரத்து செக் போஸ்ட்களில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், செக்போஸ்ட்களை தவிர தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதவிக்கு குறையாத போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு, விசாரித்து அபராதம் விதித்து அவற்றை வசூல் செய்யலாம். ஆக புதிய திருத்தங்களின்படி சம்பவ இடத்தில்(ஸ்பாட் ஃபைன்) வசூலிக்கும் அபராதம் உயர்த்தப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விதி மீறல்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. அவற்றை மின்னணுமுறையில் வசூலிக்கலாம். வசூலிக்கும் அதிகாரம் படைத்தவர்கள், விதி மீறல்களில் ஈடுபடுவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யலாம். கூடவே உரிய காரணங்கள் இருப்பதாக, வசூலிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ய சரியான காரணம் இருக்கிறது என்று நம்பினால் உரிமத்தை பறிமுதல் செய்யலாம்.

புதிய சட்டத்தின்படி ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.,1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக பிடிப்பட்டால் ரூ.10,000 அபராதம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1000, சிகப்பு, மஞ்சள் சிக்னல் இருக்கும்போது விதியை மீறி வாகனம் ஓட்டினால் ரூ.500,பர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5,000, நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ரூ.1500, ஆட்டோ, கார், பஸ்களில் ஓட்டுனருக்கு இடைஞ்சலாக உட்கார்ந்து செல்லும் பயணி ரூ.1,500 அபராதம் செலுத்த வேண்டும். இதேபோல, ஒன்றிய அரசின் 44 விதமான விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் ஆணை பிறப்பிக்கப்பட்ட மறுநாளில் அதாவது அக்.20ம் தேதி(இன்று) முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* போதையில் வாகனம் ஓட்டியதாக 6 மாதத்தில் 6,108 பேர் மீது வழக்கு
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 6 மாதத்தில் 6,108 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அபராதமாக 6 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

* போக்குவரத்து விதிகளை மீறியதாக 5.31 லட்சம் பேர் மீது வழக்கு
அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சிக்னலை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, பைக் ரேஸ் என பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கடந்த 6 மாதத்தில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 687 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து அபராதமாக 15 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரத்து 421 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment