Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 23, 2022

சூரிய கிரகணம் 2022 | என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது.!

தீபாவளி கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியிருக்கும் அதேநேரத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளே சூரிய கிரகணம் வருகிறது.

பொதுவாகவே கிரகணத்தன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று பெரும்பாலானவர்கள் தீவிரமாக கடைபிடிப்பார்கள். அதுவும் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் வரும் கிரகணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக, ஐப்பசி மாதத்தில், துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்க்கை மாதம் முழுவதுமே காணப்படுகிறது. இந்நிலையில், கிரகணம் வேறு வருவதால் இது ஒரு சில ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுவாகவே சூரிய கிரகணத்தன்று என்னவெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யக் கூடாது என்பதை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

சூரிய கிரகணம் தேதி மற்றும் நேரம்:

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது.

பொதுவாக கிரகணம் ஏற்படும் பொழுது எல்லா நாடுகளிலும் தெரியாது. இந்த சூரிய கிரகணம் ஐரோப்பிய நாடுகள், வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சூரியன் சூரிய கிரகணம் ஏற்படும்.

இந்த சூரிய கிரகணம் 1 மணிநேரம் மட்டுமே நீடிப்பதால் இது பகுதி நேர சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

* கிரகண தேதி: அக்டோபர் 25, 2022

* கிரகணம் முடியும் நேரம்: மாலை 5.43 மணி

* அதிகபட்ச கிரகண நேரம்: 1.15 மணிநேரம்

சூரிய கிரகணத்தன்று என்ன செய்யலாம், செய்யக்கூடாது?

பொதுவாக கிரகண நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது மற்றும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. எனவே சூரிய கிரகண நேரத்தில் யாராக இருந்தாலுமே வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லக்கூடாது.

கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டில் இருக்கும் அனைவருமே குளிக்க வேண்டும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளை கிரகணத்திற்கு பிறகு சாப்பிட வேண்டாம். எனவே, தேவையான அளவு மட்டும் சமைக்கவும். கிரகணத்திற்கு பிறகு அனைவரும் குளித்து அதன் பிறகு புதிதாக சமைத்து சாப்பிடுங்கள்.

உணவு மற்றும் தண்ணீரில் கிரகணத்திற்கு முன்பே துளசி இலைகள் மற்றும் தர்ப்பையை போட்டு வைப்பது நல்லது.

கிரகணத்தை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வமாக இருக்கும் ஆனால் நாம் சூரியனை சாதாரணமாக பார்ப்பது போல கிரகணத்தை பார்க்க கூடாது. அவ்வாறு பார்க்கும் பொழுது பார்வை கோளாறு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. கிரகணத்தை பார்ப்பதற்கு அறிவியல் அரங்குகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். உங்களால் வாய்ப்பிருந்தால் கிரகண நேரத்தில் கருவிகள் வழியாக பார்க்கலாம். எந்த காரணம் கொண்டும் நேரடியாக கிரகண நேரத்தில் சூரியனை பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment