Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 25, 2022

அக்.25 ஆம் தேதி சூரிய கிரகணம்: தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம்? எந்த நேரத்தில் பார்க்கலாம்?

அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ள நிலையில், இதனை எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்பதை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இருபகுதிகளைக் கொண்டது. ஒன்று முழுநிழல் பகுதி, மற்றது புறநிழல் பகுதி. முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்து விடும். இது முழு சூரியகிரணம்.

புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும். எனவே. புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின்ஒருபகுதியை மட்டும் காண்பர். மீதப்பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரியகிரகணம். இதுபோன்ற ஒரு பகுதி சூரியகிரகணம் இந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் மாலை 4 மணிக்கு நிகழ உள்ளது.

ரஷ்யாவின் தெற்குப்பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்தியக்கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் பகுதிசூரிய கிரகணத்தைக் காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 (IST) மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST) மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்தியப்பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.


சென்னையில் இந்திய நேரப்படி 5:13 மணிக்கு கிரகணம் ஆரம்பிக்கும். 5:44 மணிக்கெல்லாம் முடிந்து விடும். சூரியன் மறையும் நேரம் 5:44 மணியாக இருக்கும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். எனவே மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்நிகழ்வு நடக்கிறது.

இந்திய நகரங்களைப்பொறுத்தவரை, தலைநகர் டெல்லியில் மாலை 4.28 மணிக்கு தொடங்கி, 5.42 மணிக்கு நிறைவடையும். மும்பையில் 4.49க்கு ஆரம்பித்து 6.09 மணிக்கு முடிவடையும். சென்னையில் 5.13க்கு ஆரம்பித்து 5.45 மணிக்கு முடியும்.

சூரியனை கிரகணத்தின்போதோ, சாதாரணமாக வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. சரியான அறிவியல் உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளோடு சூரிய கிரகணத்தை காண வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஜூன் 21 ஆம் நாள் சூரியகிரகணத்தைக் காண முடிந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2-ல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரியகிரகணத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment